NEET PG 2021: முதுகலை மருத்துவ சிறப்புக் கலந்தாய்வை நடத்தக்கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி
நீட் மருத்துவ முதுகலைப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
![NEET PG 2021: முதுகலை மருத்துவ சிறப்புக் கலந்தாய்வை நடத்தக்கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி NEET PG 2021: Supreme Court rejects plea seeking special stray round of counselling NEET PG 2021: முதுகலை மருத்துவ சிறப்புக் கலந்தாய்வை நடத்தக்கோரிய மனு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/10/7176eac535d9cad2b25e26240f07257c_original.webp?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நீட் மருத்துவ முதுகலைப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் உதிரி இடங்களுக்கான சிறப்புச்சுற்று கவுன்சிலிங் நடத்தப்பட்ட பின்னர், காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பங்கேற்க அனுமதிக்கும் வகையில், சிறப்பு கவுன்சிலிங்கை நடத்துவதற்கு மருத்துவக் கவுன்சிலுக்கு உத்தரவிடுமாறு கோரியுள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் அகில இந்திய ஒதுக்கீட்டின் (AIQ) கீழ் காலியாக உள்ள முதுகலை மருத்துவ இடங்களை நிரப்ப, உதிரி இடங்களுக்காக சிறப்பு சுற்றுக் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் அஸ்தா கோயல் மற்றும் பிறர் மனு தாக்கல் செய்தனர்.
மனுவில், அகில இந்திய ஒதுக்கீட்டில் உதிரி இடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகு, காலியாக உள்ள இடங்களின் சரியான எண்ணிக்கையை வழங்குவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடுமாறு மனுதாரர்கள் கோரினர். இந்த நிலையில், மனுவைப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, விண்ணப்பதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் மனுவின் நகலை மருத்துவ கவுன்சிலிங் கமிட்டி (MCC), தேசியத் தேர்வுகள் வாரியம் மற்றும் மையத்திற்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டது.
“மனுவின் முன்கூட்டிய நகலை, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டிக்கு வழங்கவும், அவர் இந்த விஷயத்தில் அறிவுறுத்தல்களைப் பெறலாம். மனுதாரர், மனுவின் ஒரு முன்கூட்டிய நகலை மத்திய ஏஜென்சியிலும் வழங்கலாம்” என்று அமர்வு கூறியது.
இந்த வழக்கு இன்று (ஜூன் 10ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மருத்துவக் கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவையுங்கள்
முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்குத் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த 6-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றது. இந்த முறை ஜூலை 17ஆம் தேதி தேர்வு நடைபெறுகிறது.
கோவிட் பாதுகாப்பு விதிகள்
சமூக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.
மேலும், கோவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்துத் தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.
ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடைபெற்றது. ஆனால் இந்த முறை ஜூலையிலேயே தேரு நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்வுக்குத் தயாராக போதிய அவகாசம் இல்லை என்று தேர்வர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் இளங்கலைத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். #NTAdeferNEETUG என்ற ஹேஷ்டேகை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)