NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application Guidelines: மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் விண்ணப்பப் பதிவு குறித்த முக்கியமான வழிகாட்டுதல்களைத் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சரியான ஆதார் கட்டாயம்
விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை தற்போதைய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான UDID அட்டை மற்றும் இடஒதுக்கீடு கோரும் மாணவர்களுக்கான ஜாதிச் சான்றிதழ்கள் (Category Certificate) விண்ணப்பிக்கும் நேரத்தில் செல்லத்தக்கதாகவும், முறையாகப் புதுப்பிக்கப்பட்டும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.
தேர்வு எப்போது?
கடந்த ஆண்டுகளின் போக்கைக் கவனித்தால், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் மே 4 அன்றும், 2024-ல் மே 5 அன்றும் இத்தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை
- இணையதளம்: முதலில் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான ac.in பக்கத்திற்குச் செல்லவும்.
- பதிவு: முகப்புப் பக்கத்தில் உள்ள 'NEET UG 2026 Registration' என்ற இணைப்பைச் சொடுக்கவும்.
- விவரங்கள்: புதிய பக்கத்தில் உங்களது அடிப்படைத் தகவல்களைப் பதிவிட்டுப் பதிவு செய்யவும்.
- படிவம்: பதிவு முடிந்ததும், விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாக நிரப்பவும்.
- கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகச் செலுத்தவும்.
- சமர்ப்பித்தல்: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து 'Submit' பொத்தானை அழுத்தவும்.
- பதிவிறக்கம்: எதிர்காலத் தேவைக்காக உறுதிப்படுத்தப்பட்ட பக்கத்தை (Confirmation Page) பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கூடுதல் தகவல்களுக்கு: https://www.nta.ac.in/Download/Notice/Notice_20260105204547.pdf






















