Naan Mudhalvan Scheme: படிப்புகள், நுழைவுத்தேர்வு, உதவித்தொகை, கடன்... விவரங்களை அள்ளித்தரும் நான் முதல்வன் திட்டம்; பயன்படுத்துவது எப்படி?- முழு அலசல்
Naan Mudhalvan Scheme Details in Tamil: பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதே நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவுத் தேர்வு, கல்விக் கடன் உள்ளிட்ட பிற அத்தியாவசியத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தன்னுடைய பிறந்த நாளன்று உயர் கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்காக 'நான் முதல்வன்' என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். 'உலகை வெல்லும் இளைய தமிழகம்' என்ற அடைமொழியுடன், நான் முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், இது தன்னுடைய கனவுத் திட்டம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். மாணவர்களையும், இளைஞர்களையும் முதல்வனாக மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
'நான் முதல்வன்' திட்டம் என்றால் என்ன?
மாணவர்களுக்கு குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வையும் வழிகாட்டுதலையும் அளிப்பதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். இதில் மாணவர்களுக்கான உதவித்தொகை, நுழைவுத் தேர்வு, கல்விக் கடன் உள்ளிட்ட பிற அத்தியாவசியத் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
இதற்காக https://naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டது. இதில், நாடு முழுவதும் உள்ள படிப்புகள், கல்லூரிகள், நுழைவுத் தேர்வுகள், உதவித் தொகை, கல்விக் கடன் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த தகவல்கள் விரிவாக உள்ளன.
என்னென்ன படிப்புகள்?
12ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் என்ன படிக்கலாம்? என்று இந்தப் பகுதியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இதில், பி.எஸ்.சி. தொடங்கி பி.டெக்., எம்.பி.பி.எஸ். வரை ஏராளமான படிப்புகள் 33 வகைமையாகப் பிரிக்கப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கலை, அறிவியல், பொறியியல், இதழியல், இசை, நடனம் என ஒவ்வொரு படிப்பு குறித்த சுருக்கமான அறிமுகம், படிப்புக் காலம், அதிலேயே என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன? அந்தப் படிப்பு அளிக்கும் பணி வாய்ப்புகள் பற்றி விளக்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில வாரியாகக் கல்லூரிகள்
அதேபோல படிப்புகளும் தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப கல்லூரிகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தனியார் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகம், மத்திய, மாநில அரசுகளின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றையும் மாநில வாரியாக க்ளிக் செய்து, தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
நுழைவுத் தேர்வுகள்
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், ஐஐடி உள்ளிட்ட மத்தியக் கல்வி நிறுவனங்களுக்கான பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ உள்ளிட்ட 11 வகையான நுழைவுத் தேர்வுகள் குறித்த முழுமையான விவரங்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
நுழைவுத் தேர்வுகள் குறித்த பகுதியில் கீழ்க்காணும் தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, கொடுக்கப்பட்டுள்ளன.
* பள்ளிப் படிப்புக்குப் பிறகு என்னென்ன நுழைவுத் தேர்வுகள் உள்ளன?
* நுழைவுத் தேர்வு குறித்த அறிமுகம்
* அதை எழுதுவதற்கு என்ன கல்வித் தகுதி தேவை?
* தேர்வு முறை எப்படி இருக்கும்
* சேர்க்கைக்கான காலி இடங்கள்
* விண்ணப்பக் கட்டணம்
* விண்ணப்பிக்கும் முறை
கல்விக் கடன்
அதேபோல மாணவர்கள் ஒற்றைச் சாளர முறையில் எளிதாக கல்விக் கடன் பெறுவது குறித்த வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இங்கு கொடுக்கப்பட்டுள்ள வித்யா லட்சுமி இணைய முகப்பின் வாயிலாக இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் மூன்று படிநிலைகளில் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்க முடியும்.
எப்படி பதிவு செய்வது?
பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகிய விவரங்களை உள்ளீடு செய்து, பதிவு செய்ய வேண்டும். தேவையான அனைத்து விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இறுதியாக, தேவை மற்றும் தகுதிக்கு ஏற்ப வங்கிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இறுதியாக வேலைவாய்ப்புகள் என்னென்ன என்ற விவரங்களும் நான் முதல்வன் வழிகாட்டி பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு வேலை குறித்த சிறிய விளக்கம், அதற்குத் தேவைப்படும் கல்வித் தகுதிகள், தேவையான திறன்கள், பணிசார் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
உள்நுழைவது எப்படி? (How to Login?)
மாணவர்கள் எமிஸ் எண் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு லாகின் செய்ய வேண்டும். மாணவர்கள் பயன்பெறுவது தவிர்த்து, பெரியவர்கள் வழிகாட்டியாகவும் தன்னார்வலராகவும் செயல்படலாம் என்றும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
முன்னுதாரண மாணவர்கள்
அரசுப் பள்ளிகளில் படித்து, அடுத்தடுத்த உயரத்தை எட்டிய மாணவர்களைப் பற்றிய குறிப்புகள் அவர்களின் புகைப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டு மாணவர்கள் உத்வேகம் அடையும் வகையில் உள்ளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான் முதல்வன் குறித்த வழிகாட்டி புத்தகத்தை, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. புத்தகத்தை மின்னணு வடிவில் காண https://naanmudhalvan.tnschools.gov.in/assets/Uyar_Kalvi_Vazhikkatti_Book.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கலாம்.
நான் முதல்வன் திட்டம் குறித்து முழுமையாக அறிய: https://naanmudhalvan.tnschools.gov.in/