லயோலா கல்லூரியில் 'மண் மணம்': பொங்கல் விழா கொண்டாட்டம்! பாரம்பரியம், கலை, இளைஞர்கள் ஒன்றுகூடல்!
இந்த விழா, தமிழர்களின் நிலம், விவசாய மரபுகள் மற்றும் பூர்வீக பண்பாட்டு பாரம்பரியங்களைப் போற்றும் சங்கமமாக அமைந்தது.

லயோலா கல்லூரியில் தமிழர்களின் நாட்டுப்புற கொண்டாட்ட பொங்கல் விழா, ‘மண் மணம்’ என்ற பெயரில் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சென்னையின் புகழ்பெற்ற லயோலா கல்லூரியின் பொங்கல் விழா 2026 - “மண் மணம்” மிக சிறப்புடனும் பண்பாட்டு அர்த்தத்துடனும், இன்று (13 ஜனவரி) கல்லூரி வளாகத்திலுள்ள ஜூபிலி நாற்கர முற்றத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த விழா, தமிழர்களின் நிலம், விவசாய மரபுகள் மற்றும் பூர்வீக பண்பாட்டு பாரம்பரியங்களைப் போற்றும் சங்கமமாக அமைந்தது. தமிழ்நாட்டின் கிராமிய அழகினை லயோலாவிற்கு கொண்டு வரும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
விழாவின் முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 15 அணிகள் பங்கேற்று, தெருக் கூத்து, படுகா நடனம், அம்மன் ஆட்டம், கரகாட்டம், தடுக்குக் கரகாட்டம், பறையாட்டம் போன்ற நாட்டுப்புற கலை வடிவங்களை அரங்கேற்றினர். காலையில் பரிவட்டம் கட்டுதல் மற்றும் ஊர்வலத்திற்கு பின்னர் தொடக்க விழா நடைபெற்றது.
கிராமிய கலைகளை வெளிப்படுத்த ஒவ்வொரு அணிக்கும் மேடையில் 10 நிமிடங்கள் வழங்கப்பட்டது. பங்கேற்ற அணிகளுக்கு தலா ₹10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

என்னென்ன போட்டிகள்?
மேலும் சிறந்த பொங்கல் தயாரித்தல், கோலப் போட்டி, கல் தூக்கும் போட்டி, உறியடி, தானியத்தை கண்டுபிடி போன்ற பாரம்பரிய போட்டிகளும், வளாகத்தைச் சுற்றி மாட்டு வண்டி சவாரி போன்ற கிராமிய விளையாட்டுகளும் நடைபெற்றன. இவை தமிழர்களின் கிராம வாழ்க்கையின் மகிழ்ச்சியை பிரதிபலித்தன.
தொடக்க விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற கலைமாமணி டாக்டர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் மக்கள் இசை நாயகி டாக்டர் அனிதா குப்புசாமி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி LSSS மற்றும் லயோலா மாணவர் பேரவையால் இணைந்து நடத்தப்பட்டது. இது கல்வி, சமூக ஈடுபாடு மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு குறித்த கல்லூரியின் உறுதிப்பாட்டை பிரதிபலித்தது.
பண்பாட்டு பெருமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
“மண் மணம் என்பது நாட்டுப்புற கலைகள், கிராமிய மரபுகள் மற்றும் சமூக பங்கேற்பின் மூலம் இளம் தலைமுறையை தமிழர் பண்பாட்டு வேர்களுடன் மீண்டும் இணைப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்த விழா, பொங்கல் திருநாளை கொண்டாடுவது மட்டுமல்லாமல், இளைஞர்களிடையே பண்பாட்டு பெருமை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் விவசாய வாழ்க்கைக்கான மரியாதையையும் வளர்த்தது,” என்று இலயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை A. லூயிஸ் ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.
மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் மகிழ்ச்சி, பாரம்பரியம் மற்றும் தமிழ்நாட்டின் ஆன்மாவை ஒன்றிணைத்த இந்த வண்ணமயமான விழாவில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















