Kamarajar Birthday: காமராசர் பிறந்த நாள்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியர்களுக்கு அகராதிகள், பரிசுத் தொகை, ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
![Kamarajar Birthday: காமராசர் பிறந்த நாள்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின் Kamarajar Birthday function Chief Minister Stalin gave prize money, dictionaries to government school students Kamarajar Birthday: காமராசர் பிறந்த நாள்: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/3c74f736a03c72186e7e1166fcd839931689403057390332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் மாணவ, மாணவியர்களுக்கு அகராதிகள், ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்கள், சிறப்பாக பள்ளியில் செயல்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.7.2023) சென்னை மாவட்டம், நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளையொட்டி நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலம் - தமிழ் அகராதிகளையும், ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும், அப்பள்ளிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகையும் வழங்கி, வாழ்த்தினார்.
பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-யை ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று முத்தமிழறிஞர் கலைஞரால் 2006-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இக்கல்வியாண்டில் கல்வி வளர்ச்சி நாளையொட்டி சென்னை மாவட்டம், நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பரிசுத் தொகை
அதனைத் தொடர்ந்து, சென்ற கல்வியாண்டில் (2022-23) சிறப்பாக செயல்பட்ட நங்கநல்லூர், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளின் 12ஆம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவ, மாணவியர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும், 10-ஆம் வகுப்பைச் சேர்ந்த 6 மாணவ, மாணவியர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வாழ்த்தினார்.
மேலும், நேரு அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 777 மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலம்- தமிழ் அகராதிகளை வழங்கிடும் அடையாளமாக 4 மாணவ, மாணவியர்களுக்கு அகராதிகளையும், பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசுப் பொருட்களையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
7,740 புத்தகங்கள் பரிசு
தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் தன்னைச் சந்திக்க வருபவர்கள் அன்புப் பரிசாக வழங்கிய 7,740 புத்தகங்களை பள்ளிக்கல்வித் துறையின் பொது நூலகப் பயன்பாட்டிற்காக வழங்கிடும் விதமாக அப்புத்தகங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம்
வழங்கினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)