’’கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம்; எந்த தயக்கமும் இன்றி சொல்கிறேன்’’- முதல்வர் அதிரடி!
கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கலைஞர் பெயரால், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்- முதல்வர் ஸ்டாலின்.

இதுகுறித்து பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தமிழக சட்டப்பேரவையில் பேசும்போது, ’’எல்லாத் தலைவர்களுக்கும் அவர்கள் பெயரில் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ளன. அதனால் எந்தத் தயக்கமும் இல்லாமல் முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி பெயரால் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.
அதைத் தொடர்ந்து செல்வப் பெருந்தகை, சிந்தனைச் செல்வன், நாகை மாலி, ஜவாஹிருல்லா, ஈ.ஆர்.ஈஸ்வரன், வேல்முருகன், அவை முன்னவர் துரை முருகன் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரால் பல்கலைக்கழகம்
இதைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’கல்வி வளர்ச்சிக்காகப் பாடுபட்ட கலைஞர் கருணாநிதி பெயரால், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருப்பவர் கலைஞர். தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்ததற்கு, உலக அளவில் பாராட்டத்தக்க அளவில் கலைஞர் கருணாநிதி முக்கியக் காரணம்.
விரைவில் அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். இதை எவ்விதத் தயக்கமும் இன்றி அறிவிக்கிறேன்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களுக்குப் பாடமானவர் கலைஞர்
தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன், ’’பள்ளிப் படிப்பைத் தாண்டாமலேயே பல்கலைக்கழகங்களுக்குப் பாடமானவர் கலைஞர். தலைவர்கள் வரலாறு படைப்பார்கள். கலைஞர் வரலாறாகவே வாழ்ந்தவர்’’ என்று பேரவையிலேயே புகழாரம் சூட்டினார்.

