IIT Madras: ஐஐடி சென்னை சாதனை; சர்க்கரை நோயாளிகளுக்கு மலிவு விலை குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனம்!
ஐஐடி சென்னை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் பயனருக்கு உகந்த, குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (Minimally Invasive Glucose Monitoring Device) உருவாக்கி உள்ளனர்.

ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு மலிவு விலையில் குறைந்தபட்சமாக ஊடுருவக் கூடிய கண்காணிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
ஐஐடி சென்னை ஆராய்ச்சியாளர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் பயனருக்கு உகந்த, குறைந்தபட்ச ஊடுருவல் கொண்ட குளுக்கோஸ் கண்காணிப்பு சாதனத்தை (Minimally Invasive Glucose Monitoring Device) உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளனர்.
சாதனத்தின் அடிப்படை வடிவமைப்பை மறுவரையறை செய்து வசதி, அணுகல், நீண்டகாலத்திற்கு பயன்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, துல்லியத்தையும், நம்பகத்தன்மையின் உயர் தரங்களையும் உறுதி செய்துள்ளனர்.
மக்கள் தொகையில் 9 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய்
2023-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்- இந்திய நீரிழிவு நோய் (ICRM INDIAB) ஆய்வின்படி, நீரிழிவு நோய் 10.1 கோடி பேருக்கு (மக்கள் தொகையில் 9 சதவீதம் பேருக்கு) பரவியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் முறையான சுய- ரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு (SMBG) சாதனத்தில் நாளொன்றுக்கு பலமுறை விரலில் குத்தி ரத்த மாதிரிகளை எடுக்க வேண்டியிருக்கும். இந்த சாதனம் பயனுள்ளதாக உள்ளபோதும் ஊடுருவக் கூடியதாகும். இருப்பினும் தற்போதைய தலைமுறை CGM-கள் அதிக விலை, ஸ்மார்ட் போன்கள் போன்ற தனி சாதனங்களை சார்ந்திருத்தல், முடிவுகளைத் தெரிந்துகொள்ள உதவும் பிரத்யேக திரைபடிப்பிகள் என பல்வேறு வரம்புகளைக் கொண்டுள்ளன.
முறைப்படி அங்கீகாரம்
இந்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், பேராசிரியர் பரசுராமன் சுவாமிநாதன் தலைமையிலான மின்னணுப் பொருட்கள் மற்றும் மெல்லிய படல ஆய்வகத்தைச் சேர்ந்த ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள், CGM சாதனத்தை மறு வரையறை செய்யும் கண்டுபிடிப்புகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளனர். இந்த கண்டுபிடிப்புகள் பல்வேறு காப்புரிமைகள் மூலம் முறைப்படி அங்கீரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.
இத்தீர்வில், மறுபயன்பாடு கொண்ட மின்னணு சாதனங்கள், குறைந்த சக்தி கொண்ட காட்சி அலகையும், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியக்கூடிய மைக்ரோ ஊசி சென்சாரையும் இணைக்கும் அமைப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.






















