IIT Madras: ஐஐடி சென்னையில் படிக்க விண்ணப்பிக்கலாம்; பிஎஸ் தரவு அறிவியலில் சேர என்ன தகுதி? எப்படி?
ஐஐடி சென்னை Data Science and Applications மற்றும் Electronic Systems பாடங்களில் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு அடுத்த தொகுதியில் சேர்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ஐஐடி சென்னை, டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் பாடங்களில் பிஎஸ் பட்டப்படிப்புகளுக்கு (BS Degrees in Data Science and Electronic Systems) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று எந்தக் கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, மாணவர்களும் வேலைக்குச் செல்வோரும் மதிப்புமிக்க ஐஐடி கல்வியைப் பெறும் வகையில் இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மே 20 கடைசித் தேதி ஆகும்.
மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழிலில் மாற்றம் விரும்புவோர், சர்வதேச மாணவர்கள், 12-ம் வகுப்பு முடித்தவர்கள் என 38,000-க்கும் மேற்பட்டோர் தற்போது இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர். பொறியியல் அல்லாத பின்னணி கொண்டவர்கள், பணிபுரியும் பெண்கள் என 25 சதவீதத்தினர்ஆர்வமுடன் இணைந்துள்ளனர். குறிப்பாக 20 சதவீதம் பேர் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ஜேஇஇ மெயின் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நேரடி சேர்க்கை உண்டு.
மற்றவர்கள் நான்கு வார காலத்திற்கு ஆன்லைன் ஆயத்தப் பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தபின், நேரடி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிபெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://study.iitm.ac.in/ என்ற இணைப்பைப் பயன்படுத்தி இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு செய்ய மே 20, 2025 கடைசி நாளாகும்.
இப்பாடத்திட்டங்களின் நன்மைகள் குறித்து ஐஐடி சென்னை இயக்குநர் காமகோடி கூறுகையில், “GATE-2025 டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தேர்வில் முதல் 10 இடங்களைப் பெற்ற மாணவ-மாணவிகளில் 3 பேர் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மாணவர்கள். கல்வித் தரத்தில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கி எதிர்கால இந்தியாவுக்கு தயாராகும் வகையில் வழிநடத்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.
10-ம் வகுப்பில் கணிதம், ஆங்கிலம் படித்திருக்கும் எந்தப் பிரிவு (வணிகம், அறிவியல் போன்றவை) மாணவர்களும் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர முடியும். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பைப் பொறுத்தவரை 11, 12ம் வகுப்புகளில் மாணவர்கள் இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.
இந்த பாடத்திட்டங்களின் சிறப்பம்சங்கள்
⮚ ஜேஇஇ தேவையில்லை: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் சேரத் தகுதி படைத்தவர்கள்.
⮚ பாடத்திட்டத்தில் நுழையவும், வெளியேறவும் பல்வேறு வாய்ப்புகள்:
சான்றிதழ்/டிப்ளோமாவுடன் வெளியேறலாம் அல்லது பிஎஸ்சி அல்லது பிஎஸ் பட்டப்படிப்பைத் தொடரலாம்.
⮚ எங்கிருந்தும் படிக்கலாம்: பாடத்திட்ட உள்ளடக்கம் ஆன்லைனில் வெளியிடப்படும். நேரடித் தேர்வுகள் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள மையங்களில் நடத்தப்படும்.
⮚ மற்றொரு இளங்கலைப் பட்டப்படிப்புடனோ பிரத்யேகப் பட்டப் படிப்பாகவோ படிக்கலாம்.
⮚ 12-ம் வகுப்பு படிக்கும்போதே விண்ணப்பிக்கலாம்.
⮚ உண்மையான உள்ளடக்கம்: வயது வரம்போ, மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வரம்போ கிடையாது. தகுதியான மாணவர்களுக்கு நிறைய நிதியுதவிகளும் உண்டு
⮚ முன்னாள் மாணவர் தகுதி: செனட் ஒப்புதல் அளித்த பிஎஸ்சி/பிஎஸ் பட்டத்துடன் ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களும் தகுதி பெறலாம்.






















