உயர்கல்வி அமைச்சர் அதிரடி ஆய்வு: மாணவர் நலனில் அக்கறை! புதிய திட்டங்கள், விடுதி வசதிகள் மேம்பாடு!
சென்னை மண்டல அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை காயிதே மில்லத் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர் முனைவர் சங்கர் மற்றும் கல்லூரிக் கல்வி ஆணையர் சுந்தரவல்லி முன்னிலையில், சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு கலை. அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் கல்லூரி மற்றும் கல்லூரி விடுதிகளின் கட்டமைப்பு வசதிகள், புதியப் பாடப்பிரிவுகளில் மாணாக்கர்களின் சேர்க்கை நிறுவன மேலாண்மைக் குழு நடவடிக்கைகள் மற்றும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக, சென்னை மண்டலத்திற்குட்பட்ட இராணி மேரி கல்லூரியில் மாணவியர்கள் விடுதி, மாநில மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கான விடுதிகளின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதிகள். மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் மற்றும் ரூ.63 கோடியில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் அரங்கத்தின் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு செய்தார்.
நேரடி ஆய்வு
மேலும், மாணாக்கர்களிடம் அரசாய் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் குறித்தும், விடுதிப் பராமரிப்பு கோரிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார். ஆய்வின்போது, மாணாக்கர்களின் கோரிக்கையை ஏற்று உணவு வகையில் மாற்றம் செய்திட உத்தரவிட்டும் மற்றும் கூடுதல் குடிநீர் வசதி ஏற்படுத்தித் உடனடியாக நடவடிக்கை எடுக்க சார்ந்த அலுவலருக்கு உத்தரவிட்டார்.
மாநிலக் கல்லூரியில் 1973-1975ஆம் ஆண்டு கல்லூரிப் பயின்ற முன்னாள் மாணாக்கர்கள் பொருளியல் துறைக்கு நன்கொடையாக வழங்கிய Smart Class வகுப்பறைகளை மாணாக்கர்களின் பயன்பாட்டிற்காக உயர்கல்வித் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசுக் கலை கல்லூரியில் மாணாக்கர்களின் பயன்பாட்டிற்காக புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட மேசைகள் நாற்காலிகள் மற்றும் இதர தளவாடப் பொருட்களையும் ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, அண்ணா சாலையிலுள்ள காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுடன் மாணாக்கர் சேர்க்கை கல்லூரி விடுதிகள் கட்டமைப்பு வசதிகள், புதியப் பாடப்பிரிவுகள் மற்றும் நிறுவன மேலாண்மைக் குழு நடவடிக்கைகள் குறித்தும். 2021-2025 தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளில், மாணாக்கர்களின் சேர்க்கை விவரங்கள் கடந்த மூன்று ஆண்டுகளின் மாணாக்கர்களின் தேர்ச்சி விவரங்கள் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்கள், கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விடுதிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும், ’’நான் முதல்வன்", "புதுமைப்பெண்", "தமிழ் புதல்வன்" மற்றும் இதர அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவது, போதை ஒழிப்புச் சங்கத்தின் செயல்பாடுகள், உள் புகார் குழு, நிறுவன மேலாண்மைக் குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் பாலின உளவியல் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் கல்லூரி முதல்வர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பேசியதாவது:
அரசுக் கல்லூரிகளிலும் மாணாக்கர் சேர்க்கையினை அதிகரித்து, ஒப்பளிக்கப்பட்ட இடங்களை முழுமையாக நிரப்பி, மாணக்கர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் கல்லூரி முதல்வர்கள் மற்றும் அனைத்து பேராசிரியர்களும் மேற்கொள்ள வேண்டும். தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்பு பெற வழிவகுக்கும் புதியப் பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து தொடங்குவதற்கு உறிய கருத்துருக்களை கல்லூரி கல்வி ஆணையர் வழியாக அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
முதலமைச்சரின் சிறப்புத் திட்டங்களான "நான் முதல்வன்" "புதுமைப்பெண்", 'தமிழ் புதல்வன்' மற்றும் இதர அரசு திட்டங்களின் பயன்கள் முழுமையாக அனைத்து மாணாக்கர்களுக்கும் சென்றடையத் தேவையான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் எதிர்கால நலன் கருதி தொடங்கப்பட்டு, செயல்பட்டு வரும் நிறுவன மேலாண்மைக் குழுவினைக் கொண்டு கல்லூரிகளுக்கும். மாணாக்கர்களுக்கும் தேவையான நல உதவிகளைப் பெறுவதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
உள் புகார் குழு
தமிழ்நாடு "போதை இல்லா மாநிலமாக" விளங்கிட கல்லூரிகளில் செயல்பட்டு வரும் போதை ஒழிப்புச் சங்கத்தின் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். அதேபோல் கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பெண் பணியாளர்களின் நல காக்கும் வகையில் உள் புகார் குழுவினை சிறப்பான வகையில் செயல்படுத்த வேண்டும். மாணவிகளுக்கு உரிய கால இடைவெளியில் வல்லுநர்களைக் கொண்டு பாலின உளவியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
மேலும், கல்லூரி மற்றும் விடுதிகளின் கட்டமைப்பு வசதிகள் குறித்து அவ்வப்போது ஆய்வுகள் நடத்தி, தேவையான உட்கட்டமைப்பு வசதிகளின் கருத்துக்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தலைமையிடத்திற்கு உரிய கால இடைவெளியில் தெரியப்படுத்தி கட்டமைப்பு வசதிகளில் எவ்வித குறைபாடும் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாகப் பயிற்சியினை தங்களின் அன்றாடப் பணிகளில் செயல்படுத்த வேண்டும். மாணாக்கர்களின் நலனில் முழு அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பேராசிரிய பெருமக்களாகிய நீங்கள் திறமையாகப் பணியாற்றி அவர்களின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் பேசினார்.






















