Teachers Day: ஆசிரியர்கள் எனும் ஆசான்கள்; பால்யம் திரும்பிச் செல்லலாமா?- ஒரு பெருமிதப் பகிர்வு
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தையருக்கு அடுத்தவரும் தெய்வத்தைக் காட்டிலும் மேலானவரும் ஆசிரியரே.
நாடு முழுவதும் ஆசிரியர் தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாம் கடந்து வந்த ஆசிரியர்கள் குறித்து சற்றே திரும்பிப் பார்க்கலாமா?
குடியரசு முன்னாள் தலைவரும் ஆகச் சிறந்த ஆசிரியருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆசிரியர் தினம் இன்று (செப்.5) கொண்டாடப்படுகிறது.
தெய்வத்தைக் காட்டிலும் மேலானவர்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் தாய், தந்தையருக்கு அடுத்தவரும் தெய்வத்தைக் காட்டிலும் மேலானவரும் ஆசிரியரே.
ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள். ஒவ்வொரு மனிதனிடமும் குற்றம், குறைகள் இருக்கும். அதைக் குழந்தைப் பருவத்திலேயே அகற்றி, நல்லறிவு புகட்டும் ஆசான்களே ஆசிரியர்கள். ஒவ்வொரு மனிதனும் தாயின் கருவறையில் உயிரையும் ஆசிரியரின் வகுப்பறையில் அறிவையும் பெறுகிறான்.
நம் ஒவ்வொருவருக்குமே குறைந்தபட்சம் ஓர் ஆசிரியராவது நம் நினைவடுக்குகளில் பதிந்திருப்பார். பால்ய காலத்தில் அவரின் கற்பித்தல் முறையைக் காட்டிலும் அணுகுமுறை நம் மனதில் ஆழப் பதிந்திருக்கும். அந்த ஆசிரியரை பிடித்துப் போனதாலேயே அந்த பாடமும் பிடித்ததாக மாறிப் போயிருக்கும். ஆசிரியருக்காகவே படித்து, இயல்பாகவே அந்தப் பாடத்தில் ஆர்வம் முளைத்துக் கிளைத்திருக்கும்.
பெற்றோர்களுக்குப் பிறகு...
குழந்தையாய் இருக்கும்போது, நம் பெற்றோர்களுக்குப் பிறகு ஆசிரியர்களிடமே அதிக நேரத்தைச் செலவிட்டிருப்போம். அவர்களின் நடை, உடை, மேனரிசம் எல்லாவற்றுக்கும் பழகியிருப்போம். அறிந்தும் அறியாமலே அவர்களைப் பின்பற்ற ஆரம்பித்திருப்போம்.
உலகில் எத்தனையோ துறைகள் இருந்தாலும் அதில் ஒவ்வொருவரும் சேவை புரிந்து, உச்சம் தொட்டாலும் கற்பிப்பதை விட உன்னதமான பணி வேறு எதுவும் உண்டா?
தான் அறிந்தவர்கள் தன்னைக் காட்டிலும் உயரங்களை எட்டுவதை, அகந்தை தவிர்த்து அண்ணாந்து பார்த்து வாழ்த்தும் உள்ளங்கள் ஆசிரியர்களே.
ஒளி விளக்குகள்
ஒரு சின்ன அகல், ஓராயிரம் விளக்குகளை ஏற்றி வைக்கிறது. அந்த வகையில் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் ஒளி விளக்குகளே அன்பாசிரியர்கள். தங்களின் தனித்துவமான கற்பித்தல் முறை, தன்னிகரற்ற செயல்பாடுகள், அன்பு, பண்பை ஊட்டி வளர்க்கும் ஆசான்கள். அவர்களுக்கு இன்றைய ஆசிரியர் தினத்தில் நம் வாழ்த்துகளைப் பகிர்வோம்.
வாய்ப்புள்ளவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுவோம்.
வாழ்க்கையில் கல்வியோடு, அன்பு, பண்பு என அனைத்தையும் கற்பித்துக் கொண்டே இருக்கும் அனைவருக்கும் அன்பான ஆசிரியர் தின வாழ்த்துகள்.