Engineering | மீண்டும் அதிகரித்திருக்கும் எஞ்சினியரிங் ஆர்வம்! - மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
தற்போது இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இது முடியும் நிலையில் இறுதிகட்டக் கலந்தாய்வு நடைபெறும்.
தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளுக்கான இரண்டாம்கட்ட கலந்தாய்வில் பொறியியல் கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. 26 பொறியியல் கல்லூரிகளில் 80 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளதாகவும் மேலும் 16 பொறியியல் கல்லூரிகளில் 60 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதன்மூலம் காலிப் பொறியியல் இடங்கள் 20,000க்கும் கீழ் குறைந்துள்ளது.
இதையடுத்து மூன்றாம்கட்ட கலந்தாய்வில் 160 முதல் 172 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்ற 32,037 மாணவர்கள் மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது. இரண்டாம்கட்ட கவுன்சிலிங்கில் மாணவர்கள் கோர்ஸைவிட கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியானது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்ட சூழலில் உயர்கல்விக்கான பணிகள் விரைவாக தொடங்கப்பட்டது. இதையடுத்து, பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக இணையவழி மற்றும் அஞ்சல் வழி மூலமாக கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் ஆகஸ்ட் 24-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பொறியியல் படிப்பில் சேர்வதற்காக 2 ஆயிரத்து 426 விளையாட்டு வீரர்கள் உள்பட 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பின்னர், மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் செய்யப்பட்டு, மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 14 செப்டம்பர் அன்று தரவரிசைப் பட்டியல் வெளியானது. பின்னர், மாணவர்களுக்கான கலந்தாய்வு 17-ஆம் தேதி தொடங்க நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு உள்ளது போல, பொறியியல் படிப்பிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட உள்ளது.
இதன்படி, 17-ந் தேதி தொடங்கி தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட கலந்தாய்வு 24-ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கான வாரிசுகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் 17-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த வரிசையில் தற்போது இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இது முடியும் நிலையில் இறுதிகட்டக் கலந்தாய்வு நடைபெறும்.