டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பில் 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் 2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு (நல்லாசிரியர் விருது), எமிஸ் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதியன்று, தமிழகத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் சிறந்த ஆசிரியர்களைக் கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில அரசின் சார்பில் 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்பட்டு வருகிறது.
ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு
2026-ஆம் ஆண்டிற்கான இந்த விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்காமல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், கடந்த சில ஆண்டுகளாக எமிஸ் இணையதளம் மூலமாக மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ஆசிரியர்களின் வருகைப்பதிவு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், புதுமையான கற்பித்தல் முறைகள், மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கான பங்களிப்பு ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் தகுதியான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கால அவகாசம் நீட்டிப்பு
விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான இறுதி நாள் ஜூலை மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், இணையதள சர்வர் முடக்கம் மற்றும் ஆவணங்களைத் தயார் செய்வதில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகப் பல ஆசிரியர்களால் குறித்த நேரத்திற்குள் விண்ணப்பிக்க முடியவில்லை. இது தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆக.6 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட எமிஸ் லாகின் ஐடி மூலம், நீட்டிக்கப்பட்ட தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆசிரியர்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்களைச் சரிபார்த்து, தலைமை ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாகவே பரிந்துரை செய்ய வேண்டும்.
முக்கியத் தேதிகள் அறிவிப்பு
இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை, மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவினர் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து, தகுதியானவர்களின் பட்டியலை மாநிலக் குழுவிற்கு அனுப்பி வைப்பார்கள். அதன் பின்னர் இறுதிப் பட்டியல் மாநிலக் குழுவால் சரிபார்க்கப்பட்டு, செப்டம்பர் 5ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























