![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை - கரூர் ஆட்சியர் எச்சரிக்கை
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் கல்வி கற்பதற்கு நடவடிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
![குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை - கரூர் ஆட்சியர் எச்சரிக்கை District Collector takes action against parents who send their children to work without sending them to school in Karur TNN குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர் மீது நடவடிக்கை - கரூர் ஆட்சியர் எச்சரிக்கை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/06/f7c0a661721026516b27549ded6bcde71683365923658183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பள்ளி செல்லா குழந்தைகளை இந்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வைப்பதற்கான அமைக்கப்பட்ட மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றேர்கள் மீதும் அவர்களை பணிக்கு அமர்த்தும் வாகனம் பழுது பார்க்கும் நிலையங்கள், திரூமண மண்டபங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் எச்சரிக்கை விடுத்தார்.
கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளியில் சேர்த்து கல்வி கற்பதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதினாலும், கரூர் மாவட்டம் தொழில் நகரமாக இருப்பதால் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவது, குறிப்பிட்ட சதவீதம் பேர் படிப்பின் மீது ஆர்வம் இல்லாத காரணத்தாலும், படிப்பை நிறுத்தி நீண்ட நாட்கள் ஆன காரணத்தாலும் பள்ளி செல்லா குழந்தைகளின் சதவீதம் கூடியிருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த காலங்களில் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற திட்டத்தின் கீழ் அதிக அளவிலான இடை நின்ற மாணவ மாணவியர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மீதம் உள்ளவர்களை எப்படியாவது அவர்களை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மூன்று அடுக்கு அமைப்பு கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கடந்த காலங்களில் வருவாய் துறை, வளர்ச்சித் துறை, தொண்டு நிறுவனங்கள் பங்கு கொண்டு சிறப்பான பணியை செய்து வந்து இருக்கிறது. அதேபோல் இந்த ஆண்டும் அனைத்து துறையினரும் சிறப்பாக பணி மேற்கொண்டு பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து சமூக அக்கறையுடன் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக பள்ளிக்கு அனுப்புவது தொடர்பாக பெற்றோர்களுக்கும், பள்ளிக்கு செல்வது தொடர்பாக மாணவ மாணவியர்களுக்கு ஆர்வமின்மை காரணமே சில பேருக்கு உள்ளது. இதற்கு அடுத்ததாக வேலைக்கு சென்றால் குடும்பத்திற்கு சிறிய வருமானம் கிடைக்கும் என்ற மனப்பாங்கு சில பேருக்கு உள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடிய செயலாகும். இது போன்ற பெற்றோர்களையும் அவர்களின் குழந்தைகளையும் மனம் நலம் சார்ந்த ஆலோசனை கருத்துக்களை கூறி பள்ளிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் வெளி மாநில குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பது என்பது சவாலான காரியமாக உள்ளது அதை நாம் வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் அலுவலர்கள் சென்று பள்ளி செல்லாத குழந்தைகளை படிக்க வைப்பதற்கான கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும். அந்த கிராமங்களில் மதிப்புமிக்க மனிதர்கள் மூலமாகவோ அல்லது அந்த கிராமத்தின் சமுதாய தலைவர்களை கொண்டு பேசி இடைநின்ற குழந்தைகளை பள்ளி செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இரண்டு மூன்று கிராமங்களை ஒன்று சேர்த்து அதில் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை ஒருங்கிணைந்து அவர்களுக்கு மனம் நலம் சார்ந்த ஆலோசனை கருத்துக்களை கூறி பள்ளிக்கு செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழு உறுப்பினர்களால் அவர்கள் மனநிலையை மாற்ற முடியவில்லை என்றால் அடுத்த கட்ட குழு செல்ல வேண்டும் அவர்களாலும் முடியவில்லை என்றால் அதற்கு அடுத்த கட்ட உயர்நிலைக் குழு சென்று பேச வேண்டும் அப்போதும் முடியவில்லை என்றால் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சித்தலைவர் கொண்ட குழு நேரில் சென்று பேசுவதற்கு தயாராக உள்ளது. பள்ளி செல்லா குழந்தைகளின் பெற்றோர்களின் தொலைபேசி எண்களை வைத்து இதற்கென்று பிரத்யோகமாக ஒரு தொலைபேசி எண்ணை உருவாக்கி நல்ல மனநலம் சார்ந்த ஆலோசனையும், கருத்துகளையும் கல்வியின் மகத்துவம் குறித்தும் அதனால் ஏற்படும் எதிர்கால நன்மைகள் குறித்தும் பேசக்கூடிய ஓரு நபரை நியமித்து அவர்கள் அனைவருக்கும் முதல் கட்டமாக தொலைபேசியில் பேசி முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்கள் மீதும், அவர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும் தொழில் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தால் 8903331098, அல்லது 1098 என்ற தொலைபேசி எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு ம. கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி. வாணி ஈஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் செல்வி. ரூபினா (கரூர்), திருமதி. புஷ்பா தேவி (குளித்தலை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி கீதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் மரு.சந்தோஷ் குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துறை ஆட்சியர் திரு.சைபுதீன், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க திரு.சொக்கலிங்கம், கிராமியம் தொண்டு நிறுவன இயக்குனர் திரு. நாராயணன், உதவி திட்ட அலுவலர் திரு.சக்திவேல் அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், 17 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)