College Fees: மாணவர்களின் கல்விக் கட்டண விவகாரம்; கல்லூரிகளுக்கு அரசு எச்சரிக்கை- முழு விவரம்
மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கல்லூரிகளில் நடைமுறைப்படுத்தப் படாதது தொடர்பாக புகார் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்துள்ளன. இதையடுத்து மத்திய கல்வி வாரியத்தால் வழங்கப்படும் சலுகைகள் போன்று, மாநிலக் கல்வி வாரியத்திலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
உதாரணத்துக்கு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல ஆய்வக உதவியாளரைப் பணியமர்த்திக்கொள்ள அனுமதி, மொழிப்பாட விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்பட்டுள்ள சலுகைகள் ஏற்கனவே மாற்றுத் திறனாளித் தேர்வா்களால் கோரப்பட்டு, அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள் மற்றும் தலைமை அலுவலகத்தால் நிராகரிக்கப்பட்டிருப்பினும், கூடுதல் சலுகைகள் கோரினாலும் அத்தேர்வர்களின் விண்ணப்பங்களை ஆய்வு செய்து, அச்சலுகைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்விக் கட்டணம் பெறுவது தொடர்பாகக் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் கல்தூரிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் எழுதி உள்ளார். அதன் நகல் அனைத்து மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
’’அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் தனிக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. எனவே அரசாணைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும் அவ்வாறு பின்பற்றாத அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்’’.
இவ்வாறு அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Engineering Application: மீண்டும் பொறியியல் படிப்புக்கு எகிறும் மவுசு... குவியும் விண்ணப்பங்கள் - அமைச்சர் பொன்முடி