மேலும் அறிய
Advertisement
விலங்குகள் அச்சுறுத்தல், மலையில் பயணம்....சம்பளத்துக்கு ஆள் வைத்து மலை கிராமத்திற்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்
ஒவ்வொரு ஆசிரியரும் தமிழரசன் போலவே மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்விக்கும் தங்களது சிரமங்களை பார்க்காமல் பணியாற்றினால், எல்லா மாணவர்களுக்கும் கல்வி அறிவு புகட்ட முடியும்.
பென்னாகரம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் 7 கி.மீ., விலங்குகளின், அச்சுறுத்தல்களுக்கிடேயே மலையில் பயணம். மாத ஊதியத்திற்கு ஆள் வைத்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று மலை கிராம குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த வட்டவணஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிமலை, கோட்டூர் மலை, அலக்கட்டுமலை என மூன்று மலை கிராமங்கள் உள்ளன. இதில் அலக்கட்டு மலையில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அடர்ந்த வனப் பகுதிகளில் சாலை வசதி முழுவதுமாக இல்லாத, குண்டும் குழியுமான மலைச் சாலையில் ஏழு கிலோமீட்டர் தூரம், 45 டிகிரி கோணத்தில் ஏறி, இறங்க வேண்டும். இந்த மலையில் உள்ள மக்களுக்கு சாலை, குடிநீர், மருத்துவம், கல்வி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. இந்த மலையில் இருந்து உடல்நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், தூளி கட்டி மேலிருந்து தரை பகுதிக்கு 7 கிலோமீட்டர் கடந்த பிறகு இருசக்கர வாகனங்கள் மூலமாக மருத்துவமனைக்கு பாலக்கோடு செல்ல வேண்டிய நிலையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதி மலை கிராமப் பிள்ளைகள் படிப்பதற்காக அரசு மலை மீது தொடக்கப்பள்ளி தொடங்கியுள்ளது. போதிய கட்டிட வசதி இல்லாமல் பைபர் மூலமாக இரண்டு அறைகள் கொண்ட வகுப்பறை கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மலை கிராமத்தில் உள்ள பிள்ளைகள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை இதே பள்ளியில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பு மலையை விட்டு கீழே இறங்க வேண்டும். அவ்வாறு ஏழு கிலோமீட்டர் தூரம் நடக்கின்ற பொழுது வனப்பகுதியில் ஐந்து இடங்களில் சிற்றாறுகள் குறுக்கிடுவதும், ஆங்காங்கே யானைகள், காட்டு எருமை உள்ளிட்ட விலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதால், பெரும்பாலான குழந்தைகள் பள்ளி படிப்பை 5-ம் வகுப்பிற்கு மேல் படிக்காமல் நிறுத்தி விடுகின்றனர். மேலும் இந்த தொடக்கப் பள்ளியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் தினந்தோறும் 7 கிலோமீட்டர் மலையேறி செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் மலை சாலையில் பயணிக்கும் அனுபவம் இல்லாததால், அடிக்கடி விழுந்து அடிபடுகின்ற சூழலும், விலங்குகளின் அச்சுறுத்தல்களும் இருப்பதால், பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு வாரம் ஒரு முறை கூட வராமல் நின்று விடுகின்றனர். இதனால் இந்த மலை கிராமத்தில் உள்ள பிள்ளைகளுக்கு கல்வி என்பதும் ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பாப்பரப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற ஆசிரியர் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று கலந்தாய்வு கூட்டத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது 16 ஆசிரியர்கள் இந்த அலக்கட்டு மலை கிராமத்திற்கு செல்ல முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழரசன் பதவி உயர்வு பெற்ற நிலையில், விரும்பி அலக்கட்டு மலை கிராம பள்ளியை தேர்ந்தெடுத்துள்ளார். அவர் தேர்ந்தெடுத்தபொழுது உடன் கலந்தாய்வு கூட்டத்தில் இருந்த ஆசிரியர்கள் மலை கிராமம், வன விலங்குகள் அச்சுறுத்தல், தினமும் சென்று வருவதில் பல்வேறு சிக்கல்கள் என அச்சுறுத்தியுள்ளனர்.
ஆனாலும் மனம் தளராமல் அந்த மலை கிராம மாணவர்களுக்கு கட்டாயம் கல்வியை கற்பிப்பேன், அவர்களது முன்னேற்றத்திற்கு நான் உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதியோடு முதல் நாள் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது மலை மீது ஏறுகின்ற பொழுது முறையான சாலை வசதி இல்லாமல், மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் பள்ளி முடிந்து கீழே இறங்கும்பொழுது பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இதனை அடுத்து நடைபயணமாக செல்லலாம் என அவ்வாறு சென்றுள்ளார். அப்பொழுது கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு மலை ஏறுவதும் இறங்குவதுமாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். ஆனால் கீழிருந்து பள்ளிக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து செல்ல முடியாத சூழல் இருந்து வந்துள்ளது. இதனால் மீண்டும் இரு சக்கர வாகனத்தையே ஆசிரியர் தமிழரசன் செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் அடிக்கடி விழுந்து அடிபடுவதால், இதற்கு மாற்று ஏற்பாடாக பள்ளிக்கு தினம் தோறும் செல்கின்ற வகையில் அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். கிராமத்தில் இரண்டு பேர் மட்டுமே இரு சக்கர வாகனத்தை ஆட்களை அமர வைத்துக் கொண்டு பாதுகாப்பாக ஓட்டி வருகின்ற நிலையில், மகாலிங்கம் தினந்தோறும் ஆசிரியரை அழைத்துச் செல்வதும், பள்ளி முடிந்த பிறகு அழைத்து வந்து கீழே விழுவதுமாக இருந்துள்ளார்.
இதனால் தொடர்ச்சியாக மகாலிங்கம் மூலமாகவே தினந்தோறும் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கலாம் அதற்காக மகாலிங்கத்திற்கு மாதம் ஊதியம் (9000) வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதற்கு மகாலிங்கம் ஒப்புதல் தெரிவித்து தினந்தோறும் காலை ஆசிரியரை மலைக்கு அழைத்துச் செல்வதும், பள்ளி முடிந்து மாலை கீழே கொண்டு வந்து விடுவதுமாக இருந்து வருகிறார். இதனால் பள்ளிக்குச் செல்கின்ற ஆசிரியர் தமிழரசன் மலை கிராமத்தில் உள்ள பெற்றோர்களிடம் பேசி, குழந்தைகளை பள்ளிக்கு வர வைத்துள்ளார். தற்பொழுது 15 பிள்ளைகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். மேலும் ஐந்தாம் வகுப்பு முடித்த மாணவர்களை கீழே உள்ள பள்ளிகளில் விடுதிகளில் சேர்த்து படிக்க வைக்கும் முயற்சியும் மேற்கொண்டுள்ளார். இந்தப் பள்ளியில் மாணவர்களின் வருகை அதிகரிக்க வேண்டும், மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நண்பர்கள் மூலமாக பள்ளிக்கு தேவையான கணினி உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி வருவதும், பள்ளி வகுப்பறை முழுவதும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையில் புகைப்படங்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தியுள்ளார். மேலும் வகுப்பறையில் பாடம் எடுக்கின்ற பொழுது மாணவர்கள் ஆசிரியரை உற்று கவனிக்க வேண்டும் என்பதற்காக, பாடங்களில் வருவதை தானே நடித்து பாடம் நடத்தி வருகிறார். இதனால் மாணவர்கள் ஆர்வமாக ஆசிரியரின் வருகையையும், பாடம் வகுப்பு நடத்துவதையும் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்த அணைக்கட்டு மலை கிராம பள்ளிக்கு ஆசிரியர் தமிழரசன் வந்த பிறகு பள்ளியில் உள்ள மாணவர்கள் இடைநீற்றல் இல்லாமல், பள்ளிக்கு வருவதும், நன்றாக படித்தும் வருகின்றனர். இதனால் மலை கிராமத்தில் உள்ள பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமலேயே ஊதியம் பெற்று வந்த நிலையில், தற்பொழுது தமிழரசன் ஆசிரியர் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, அவர்களது வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதற்காக மாத ஊதியும் கொடுத்து ஒருவரை வைத்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று வருவது மலை கிராம மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அதேபோல் மலை கிராம மாணவர்களுக்கு கல்வியும் தடையில்லாமல் கிடைக்கிறது. எத்தனையோ அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சிறந்த ஆசிரியர் என்ற விருதை பெற்றிருந்தாலும், இந்த மாணவர்களின் வளர்ச்சிக்காக, மலை, வன விலங்கு அச்சுறுத்தல்கள், இதையெல்லாம் கடந்து கல்வி கற்பிக்கின்ற பொழுது ஒரு மிகுந்த மன நிறைவு இருப்பதாக ஆசிரியர் தமிழரசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆசிரியரும் தமிழரசன் போலவே மாணவர்களின் வளர்ச்சிக்கு கல்விக்கும் தங்களது சிரமங்களை பார்க்காமல் பணியாற்றினால் மலை பகுதியில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மாணவர்களுக்கும் கல்வி அறிவு புகட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion