CUET UG: இனி ஆண்டுக்கு 2 முறை க்யூட் தேர்வு.. புதிய திட்டத்தைக் கூறிய யுஜிசி தலைவர்!
க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு 11.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யுஜிசி தலைவர், இனி ஆண்டுக்கு இரு முறை க்யூட் தேர்வை நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
க்யூட் இளங்கலைத் தேர்வு
க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு 11.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள யுஜிசி தலைவர், இனி ஆண்டுக்கு இரு முறை க்யூட் தேர்வை நடத்தத் திட்டமிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி 12ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு யுஜிசி சார்பில் வெளியானது. ஜூலை மாதத்தில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது. கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்த உள்ளது.
யுஜிசி தலைவர் சொன்னது என்ன?
இதற்கான விண்ணப்பப் பதிவு அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் க்யூட் இளங்கலை நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த அறிவிப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார், ''க்யூட் இளங்கலைத் தேர்வுக்கு அதிகபட்சமாக 11,513,19 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில், 9,13,540 விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர்.
இதில் பெரும்பாலான தேர்வர்கள் தொலைதூர, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள். எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
பொதுத் தேர்வுகளில் 99 முதல் 100 சதவீதம் வரை மிக அதிக மதிப்பெண்களைப் பெற்றே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ, அழுத்தமோ இனி மாணவர்களுக்குத் தேவை இல்லை. இனி மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் க்யூட் தேர்வு மூலமாக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.
முன்பெல்லாம் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற முடியாத மாணவர்களால், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் படிக்கவோ கால் வைக்கவோ முடியாது. ஆனால், க்யூட் நுழைவுத் தேர்வின் மூலம் இது சாத்தியம் ஆகியுள்ளது.
ஏராளமான பல்கலைக்கழகங்கள் இதில் பங்கேற்பதும் ஊக்கமளிப்பதாக உள்ளது. வரும் காலங்களில், இன்னும் அதிக பல்கலைக்கழகங்கள் க்யூட் தேர்வைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கிறோம்.
இனி ஆண்டுக்கு இரு முறை க்யூட் தேர்வை நடத்தத் திட்டமிட்டு வருகிறோம். இதன்மூலம் அதிக மாணவர்கள் திட்டமிட்டு, தேர்வை எழுத முடியும்'' என்று யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கூடுதல் விவரங்களுக்கு: https://rte.tnschools.gov.in/moredetails
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்