ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலை செய்யச் சொல்வதா?- உயர் கல்வித்துறை கடும் எச்சரிக்கை
சில ஆய்வு நெறியாளர்கள் வீட்டு வேலைகள் உள்ளிட்ட தனிப்பட்ட வேலைகளை ஆராய்ச்சி மாணவர்கள் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது.
ஆய்வு நெறியாளர்கள் தங்களின் தனிப்பட்ட, வீட்டு வேலைகளைச் செய்ய வேண்டும் என்று ஆய்வு மாணவர்களை வற்புறுத்தக்கூடாது என உயர் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பட்டங்களை ஆளுநர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிக்கொண்டிருந்தபோதே, பட்டம் பெற வந்த மாணவர் ஒருவர், ஆளுநரிடம் நேரடியாக மேடையில் வைத்தே பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த கடிதத்தில் முனைவர் பட்டம் பெறப் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களிடம் பல்கலைக்கழக பேராசிரியர்களாக இருக்கும் சில வழிகாட்டிகள் (Guide), பல்லாயிரக்கணக்கில் பணம் கேட்பதாகவும், ஓட்டலில் விருந்து வைக்க மாணவர்களை நிர்பந்தம் செய்வதோடு, தங்களது தனிப்பட்ட வேலைகளையும் செய்ய கட்டாயப்படுத்துவதாக மாணவர் பிரகாஷ் குறிப்பிட்டு இருந்தார்.
புறக்கணிக்கப்படும் ஆதி திராவிட மாணவர்கள்
அத்தோடு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் ஆதிதிராவிடர் நல விடுதிகள் முறையாக இயங்குவதில்லை என்றும் வசதிகள் ஏதும் செய்துக்கொடுக்கப்படாமல் ஆதிதிராவிட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
மேலும் விளையாட்டு விழா என்று பெயருக்கு ஏதேனும் ஒரு விழாவைக் கூறி ஆயிரக்கணக்கில் மாணவர்களிடம் வசூல் வேட்டையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இது மாணவர்கள், கல்வியாளர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டார். கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்று அங்கு பொறுப்பில் இருந்த ஊழியர்களைக் கண்டித்தார்.
வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது
இந்த நிலையில், மாணவர்களை கல்வி சார்ந்த பணிகளைத் தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என உயர் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
சில ஆய்வு நெறியாளர்கள் வீட்டு வேலைகள் உள்ளிட்ட தனிப்பட்ட வேலைகளை ஆராய்ச்சி மாணவர்கள் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக எங்களின் கவனத்துக்கு வந்துள்ளது. இது மாணவர்களின் மாண்பை குலைக்கும் செயலாகும். கொடுமைப்படுத்துவது ஆகும்.
வேறு வகைகளில் மாணவர்களை பயன்படுத்தினாலோ, அலைக்கழித்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆய்வு நெறியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.