தமிழில் 93 மார்க்.. திருக்குறள் ரொம்ப பிடிக்கும்.. அசத்திய பீகார் மாணவி.. தமிழைப் பற்றி சொன்னது என்ன ?
"சென்னை கவுல் பஜார் பகுதியை சேர்ந்த பீகார் மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்"

பீகாரை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். ஆசிரியர்கள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மருத்துவம் படிக்க உள்ளதாகவும், நீட் தேர்விற்கு அரசு உதவ மாணவி கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
பீகாரை சேர்ந்த மாணவி
சென்னை பொழிச்சலூர் அடுத்த கவுல் பஜாரில் பீகாரை சேர்ந்த தனஞ்ஜே திவாரி- ரீனாதேவி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் ரியா குமாரி, ஜியா குமாரி, சுப்ரியா குமாரி, இவர்கள் மூன்று பேரும் கவுல் பஜார் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த 2009 ஆம் ஆண்டு தந்தை தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வந்துள்ளார். அப்போது முதல் தற்போது வரை வெல்டிங் வேலை செய்து வருகிறார். தாய் மருந்து நிறுவனம் ஒன்றில், பணிபுரிந்து வருகிறார்.
தமிழில் சாதித்த பீகார் மாணவி
அடிக்கடி சொந்த ஊர் செல்ல சிரமமாக இருந்ததால் குடும்பத்துடன் இங்கேயே தங்கி அரசு பள்ளியில் பிள்ளைகளை சேர்ந்து தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைத்துள்ளார். இதில் இரண்டாவது மகள் அரசு பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகிறார். நேற்று முன்தினம் வெளியான 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அந்த மாணவி தமிழில் எடுத்த் மதிப்பெண் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
தமிழ்-93, ஆங்கிலம் -99, கணிதம்- 89, அறிவியல்- 87, சமூக அறிவியல்- 99 என மொத்தம் 467 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பீகாரை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்திருப்பது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது . இதனை கொண்டாடும் வகையில் பள்ளி ஆசிரியர்கள் மாணவியின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி சால்வை அணிவித்து மாணவியை வாழ்த்தி பாராட்டினர்.
மாணவி ஜியா குமாரியிடம் பேசியதில் அவருக்கு ஆரம்பத்தில் தமிழ் படிக்கவும் புரிந்து கொள்ளவும் சற்று சிரமமாக இருந்தாலும், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் சமூகத்தின் ஒத்துழைப்பால் நாளடைவில் தமிழ் எளிமையாக இனிமையாக மாறிவிட்டது. படித்து மருத்துவராகி சேவை புரிய இருப்பதாகவும், நீட் தேர்விற்கு அரசு உதவி புரிய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
திருக்குறள் ரொம்ப பிடிக்கும்
இது குறித்து மாணவி நம்மிடம் கூறுகையில், இந்தியை விட தமிழ் கடினமாக இருந்தது. ஆனால் தமிழ் மொழியை புரிந்து கொள்ளத் தொடங்கியதும் அது எளிதாகிவிட்டது. இங்கு இருப்பவர்கள் அனைவரும் தமிழ் மொழியை மட்டுமே பேசினர். அதனால் நானும் தமிழ் மொழியை பேச, எழுத கற்றுக்கொண்டேன். தமிழில் எனக்கு திருக்குறள் ரொம்ப பிடிக்கும். குறிப்பாக முயற்சியை வலியுறுத்தும் திருக்குறள்கள் மிகவும் பிடித்திருக்கிறது.
எனது தந்தைக்கு மாத வருமானம் ரூ.10 ஆயிரம் தான் கிடைக்கும். இது எங்கள் குடும்பத்திற்கு போதமானதாக இல்லை. இருந்தாலும் அரசு பள்ளியில் மதிய உணவு, சீருடைகள், காலணிகள், புத்தகங்கள் இலவசமாக வழங்கியது எனது கல்விக்கு உதவியாக இருந்தது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்





















