Central Government Scholarship: கல்லூரி முடிக்கும்வரை மத்திய அரசு உதவித்தொகை; யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம்?- முழு விவரம்
Central Sector Scholarship Scheme: மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS
மத்திய அரசு உயர் கல்வி படிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கி வருகிறது. யாரெல்லாம், எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம்.
நாடு முழுவதும் சிறப்பாகப் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை (CENTRAL SECTOR SCHEME OF SCHOLARSHIPS FOR COLLEGE AND UNIVERSITY STUDENTS) வழங்கப்படுகிறது. மத்திய உயர் கல்வி அமைச்சகம் இந்த உதவித்தொகையை வழங்குகிறது.
கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்வித் தகுதி (மெரிட்) அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
என்ன தகுதி?
* வழக்கமான கல்லூரி படிப்பைப் படிப்பவராக இருக்க வேண்டும். அஞ்சல் வழிக் கற்றலுக்கோ, திறந்தநிலைப் படிப்புப் படிக்கும் மாணவர்களுக்கோ உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.
* ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்கக் கூடாது.
* டிப்ளமோ மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை கிடையாது.
* வேறு எந்த உதவித் தொகையையும் பெறும் மாணவராக இருக்கக் கூடாது.
* உதவித்தொகை இரு பாலருக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படும். அதாவது 50 சதவீத உதவித்தொகை மாணவர்களுக்கும் 50 சதவீத உதவித்தொகை மாணவிகளுக்கும் வழங்கப்படும்.
* அதிகபட்சமாக 82 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மானுடவியல், அறிவியல் மற்றும் வணிகப் படிப்புகளுக்கு 3:3:1 என்ற விகிதத்தில் அரசு உதவித்தொகையை வழங்கி வருகிறது.
* ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்சி பிரிவினருக்கு 15 சதவீதமும் எஸ்டி பிரிவினருக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு 5% கிடைமட்ட இட ஒதுக்கீடு உண்டு.
எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது?
கல்லூரி படிப்புகளில் முதல் 3 ஆண்டுகளுக்கு ஆண்டுக்குத் தலா ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். முதுகலைப் படிப்புகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதேபோல தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 4 மற்றும் 5ஆம் ஆண்டுகளில் தலா ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்
மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த உதவித்தொகையைப் பெற புதுப்பிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும். நேரடியாக மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு தொகை செலுத்தப்படும்.
இந்த நிலையில் இந்த உதவித்தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று பார்க்கலாம்.
மாணவர்கள் முதலில் மத்திய அரசின் உதவித்தொகைக்கான தளத்தில், (National Scholarship Portal) முன்பதிவு செய்ய வேண்டும்.
பொதுவாக என்னென்ன ஆவணங்கள் அவசியம்?
* மாணவரின் ஆதார் எண்
* மாணவர்களின் வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு
* வங்கிக் கணக்கு எண் விவரங்கள் (சொந்த வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு, பெற்றோர்/ பாதுகாவலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள்).
* தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட வருமானச் சான்றிதழ்.
* இ- மெயில் முகவரி
* மொபைல் எண்
ஆகியவற்றை உள்ளிட்டு, “Central Sector Scheme of Scholarship for College and University Students” என்ற பக்கத்தை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசு உயர் கல்வி உதவித் தொகை பற்றிய விதிமுறைகளை https://scholarships.gov.in/public/schemeGuidelines/Guidelines_DOHE_CSSS.pdf என்ற இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/FAQ_DOHE_CSSS.pdf
மேலும் விவரங்களை அறிய: https://scholarships.gov.in/