10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் - சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு..!
நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, 30:30:40 என்ற அடிப்படையில் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. நிர்வாக இயக்குனர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “அடுத்த ஆணடுக்கான சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். இவ்வாண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் தேர்வுகளின் முதற் கட்டமும், அடுத்தாண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தேர்வுகளின் இரண்டாம் கட்டமும் நடைபெறும்.
இதற்காக நடப்பு கல்வியாண்டின் பாடத்திட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும். அத்துடன் கடந்த கல்வியாண்டைப்போல நடப்பு கல்வியாண்டிலும் பாடத்திட்டம் குறைக்கப்படும். அதுதொடர்பாக, இம்மாதம் அறிவிக்கை வெளியிடப்படும்.
மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக சி.பி.எஸ்.இ. அறிவிக்க உள்ள வழிகாட்டுதல்கள் மற்றும் கொள்கையின்படி அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் பிராஜெக்டுகளை நம்பகமானதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிங் ஆலோசனைகளையும் பள்ளிகள் பெறும்” என அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக இயங்காத காரணத்தாலும், மாணவர்களுக்கு தேர்வுகள் முறையாக நடத்தப்படாத காரணத்தாலும் தேர்வுகளை இரண்டு கட்டங்களாக நடத்த சி.பி.எஸ்.இ. நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய நேற்றுதான் கடைசி நாள் என்பதால் நேற்று மதிப்பெண் பட்டியல் தொடர்புடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மதிப்பெண்கள் 30:30:40 என்ற அடிப்படையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஊரடங்கிற்கு முன்பாக நடத்தப்பட்ட செய்முறைத் தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அப்படியே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மாத இறுதிக்குள் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கனவே தகவல்கள் வௌியாகி இருந்தது. இந்த நிலையில், வரும் 12-ந் தேதி சி.பி.எஸ்.இ. 12 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும், இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் தயார் செய்ய கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.