CBSE 10th Result 2022: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின; பார்ப்பது எப்படி?
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
கரோனா பெருந்தொற்றுச் சூழல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த 2020ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டன. அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அறிவித்தது.
2 பருவத் தேர்வுகள்
புதிய நடைமுறையின்படி, பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர் - டிசம்பர் மாதங்களிலும், 2-வது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது.
ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டவாறு 2021-22 கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ முதல் பருவப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்றது.
ஏப்ரல் - மே மாதத்தில் பொதுத் தேர்வுகள்
அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 17ஆம் தேதி வரை நடைபெற்றது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 26ஆம் தேதி தொடங்கி, மே 18ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கிடையே தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலக் கல்வி வாரியங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, உயர் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் மத்தியக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுந்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
இச்சூழலில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று (ஜூலை 22) வெளியிட்டுள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதை மாணவர்கள் https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
குறிப்பாக, மாணவர்கள் தங்களின் பதிவெண், பள்ளி எண், பிறந்த தேதி, நுழைவுச் சீட்டு எண் ஆகியவற்றைப் பதிவிட்டு https://cbseresults.nic.in/class-tenth/class10th22.htm என்ற இணைய முகவரியில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்