Guest Lecturers: கல்லூரிகளில் கூடுதல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் 5000 ரூபாயை உயர்த்தி 25,000 ஆக கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளத்தை வழங்கினார்- அமைச்சர் கோவி செழியன்.
கல்லூரிகளில் கூடுதல் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் 'Outcomes Based Education Workshop Series' கல்விப் பட்டறையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சி மேடையில் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் பேசியதாவது:
’’உயர் கல்வியின் மேம்பட்ட நடவடிக்கைகளுக்கு மாணவர்களுடைய கல்வித்திறன் எப்படி இருக்க வேண்டும், அதற்கு உயர் கல்வித்துறை என்னென்ன பணிகளை ஏற்பாடு செய்துதர வேண்டும் என்கிற உயரிய நோக்கத்தில் முதல்வரின் ஆணைக்கிணங்க உயர் கல்வித்துறையின் பல்வேறு ஆய்வு கூட்டங்கள் கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
உயர் கல்வித்துறை உச்ச நட்சத்திரத் துறை
உயர் கல்வித்துறை தமிழகத்தில் உற்று நோக்கக்கூடிய உச்ச நட்சத்திர துறையாக இருக்கிறது. திறனடிப்படைவில் கல்வி கற்கும் முறை அமைந்தால் அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து திறனும் சென்றடையும். உயர்கல்வி துறையில் நல்ல ஆசிரியர்களும் அதிகாரிகளும் உள்ளனர். ஏற்கனவே இருந்த குறைகளை அகற்றி இந்த அரசு செயல்பட்டு வருகிறது.
கற்றல், கற்பித்தல்,தேர்வு முறை, அதன் நோக்கம் இவை அனைத்தும் மாணவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதுதான் உயர்கல்வி துறையின் முக்கிய நோக்கம்.
சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த பயிலரங்கம் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மண்டல அளவிலும் கல்லூரி அளவில் இந்த பயிலரங்கங்கள் நடைபெறும். திறனடைவு கற்றல் முறை குறித்தான விழிப்புணர்வை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கும்’’ என்றார்.
10 ஆண்டுகளில் இரண்டு முறைதான் உயர்வு
பல்கலைக்கழக மானிய குழு கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்பது குறித்தான கேள்விக்கு, ’’கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறைதான் 5000 ரூபாயை உயர்த்தி தந்தார்கள்.
15,000 ஆக இருந்த சம்பளத்தை 20,000- ஆக உயர்த்தி தந்தார்கள். இந்த சம்பள உயர்வும் ஆட்சி முடியும் நேரத்தில்தான் அவர்கள் வழங்கினார்கள்.
ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டுக்குள் 5000 ரூபாயை உயர்த்தி 25,000 ஆக கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பளத்தை வழங்கினார்
நிதியை நிறுத்திய யுஜிசி
கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் நிதியாக யுஜிசி ஒரு ஆண்டுக்கு 40 கோடி ரூபாய் தர வேண்டும். இந்த நிதியை தொடர்ந்து தமிழக அரசு கேட்டு வருகிறது. 2017ல் நிறுத்தப்பட்ட இந்த தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஆனாலும் கல்லூரி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக சுமார் 2000-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்களை நியமித்து அவர்களுக்கு பணியை வழங்கியுள்ளது தமிழக அரசு.
கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களை விரைவில் உருவாக்க இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து நிரந்தர பேராசிரியர்களை உருவாக்க முன் முயற்சியை உயர்கல்வித்துறை எடுத்து வருகிறது’’.
இவ்வாறு அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.