(Source: ECI/ABP News/ABP Majha)
Syllabus reduction: பள்ளிப் புத்தகங்களில் 50% வரை பாடங்கள் குறைப்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளி பாடப் புத்தகங்களில் 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளி பாடப் புத்தகங்களில் 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் நிருபர்களிடம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பேசியதாவது:
''தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக மாவட்ட ஆட்சியர் அங்கன்வாடி பள்ளியைத் திறம்பட அமைத்துள்ளார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அந்தந்த ஆட்சியர்கள் மூலம் அங்கன்வாடிகளை முன்மாதிரியாகக் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் ஏற்கெனவே நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 27 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 15 அறிவிப்புகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. அதுவும் இந்த மாதம் இறுதியில் விரைவில் நடைமுறைக்கு வந்துவிடும். வரும் கூட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அதிக அறிவிப்புகள் வர இருக்கின்றன.
கொரோனா காலத்தில் பள்ளி பாடப் புத்தகங்களில் 35 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மார்ச் மாதம் இறுதிக்குள் பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும். அடுத்த மாதம் திருப்புதல் தேர்வுகள் நடத்தி, மே மாதம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 -க்கு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. வினாத்தாள்களில் எந்தவித மாற்றமும் இருக்காது. பழைய முறைப்படிதான் இருக்கும்.
தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு நான் முதல்வன் என்ற திட்டத்தை ஏற்கெனவே உருவாக்கியுள்ளோம். மாணவர்களாகிய நீங்கள் பயப்படாமல் அச்சப்படாமல் தேர்வை எழுதுங்கள், உங்களுக்கான அந்த நாற்காலி காத்துக் கொண்டிருக்கிறது.
வீட்டில் உள்ள பெற்றோர்கள், மாணவர்களை நீ மருத்துவராக வர வேண்டும், பொறியாளராக வர வேண்டும் என்று கூறக்கூடாது. பக்கத்து வீட்டுப் பையனைப் பார்த்து ஒப்பிடக்கூடாது. மாணவர்களுக்கு என்ன வருமோ அதனைப்படிக்க வேண்டும். உங்களுக்கென்று தனித் திறமை உள்ளது. அந்தத் திறமையை நோக்கி நீங்கள் பயணம் செய்ய வேண்டும். உங்களைக் காப்பதற்காகத்தான் இந்த அரசு உள்ளது. நீங்கள் மகிழ்ச்சியாகப் படியுங்கள். உங்கள் திருப்திக்கு நீங்கள் தேர்வை எழுதங்கள்.
தமிழகம் முழுவதும் 3,030 பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சேதமான கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. புதிய கட்டிடங்கள் கட்டவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதுவரை குழந்தைகள் கல்வி தடைப்படக்கூடாது என்பதால் அருகில் உள்ள கட்டிடங்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் நமக்கு மாநிலம் முழுவதும் 1.70 லட்சம் மையம் தேவைப்படுகிறது. தற்போது 1.50 லட்சம் மையம் ஆரம்பிக்கப்பட்டு, நல்ல பயன்பாட்டில் உள்ளது. அதையும் வரும் காலத்தில் இன்னும் விரிவுபடுத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.''
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.