ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் நிறைவேற்ற 15 நிமிடம் போதும்; மனம்தான் இல்லை- திமுக அரசைச் சாடும் ராமதாஸ்!
15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது.

தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கூட தி.மு.க. அரசுக்கு மனம் இரங்கவில்லையா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
''பழைய ஓய்வூதியத் திட்டம், சம வேலைக்கு சம ஊதியம், அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வரும் நிலையில் அவற்றை நிறைவேற்ற தமிழக அரசு இன்று வரை முன்வர மறுக்கிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களை சாலையில் இறங்கி போராட அரசு தூண்டுவது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழ்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள்தான் எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குபவர்கள். அவர்கள் எந்தக் கவலையுமின்றி இருந்தால்தான் மாணவர்களை அறிவார்ந்தவர்களாக உருவாக்குவதில் முழுமையான கவனத்தை செலுத்த முடியும்.
போராட்ட நிலையிலேயே வைத்திருக்கிறது
ஆனால், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அடிப்படை வாழ்வாதாரம் சார்ந்த கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாமல் அவர்களை போராட்ட நிலையிலேயே தமிழக அரசு வைத்திருக்கிறது. இது யாருக்கும் நல்லது அல்ல.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு 2023ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறித்தது. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த 30 கோரிக்கைகளுடன், அரசாணை எண் 243ஐ நீக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்றக் கோரி போராட்டம் நடத்தினார்கள்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளில் முக்கியத்துவம் இல்லாத சிலவற்றை மட்டும் தமிழக அரசு நிறைவேற்றிய நிலையில், தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், 15 கோரிக்கைகளை மட்டும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை.
ஒருநாள் இடைவெளிக்கு பல்லாயிரம் ஊதியக் குறைப்பு
ஒரே மாதிரியான பணி செய்யும் ஆசிரியர்களுக்கு, அவர்கள் ஒரே ஒரு நாள் இடைவெளியில் பணியில் சேர்ந்தார்கள் என்பதற்காக பல ஆயிரம் ஊதியத்தை குறைத்து வழங்குகிறது தமிழக அரசு. இது தொடர்பாக பல கட்டங்களாக போராட்டம் நடத்தப்பட்ட பிறகு இது குறித்து ஆசிரியர்களுடன் அரசு பேச்சு நடத்தியது .
பள்ளிக்கல்வித் துறை செயலாளர், இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆசிரியர் அமைப்புகளுடன் 10.03.2023, 14.06.2023, 01.11.2023 ஆகிய தேதிகளில் மூன்று கட்ட பேச்சு நடத்தினர். அதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை.
பேச்சுவார்த்தை எதற்கு?
அதுமட்டுமின்றி, ஒராண்டுக்கும் மேலாக பேச்சு நடத்தப்படாத நிலையில் வரும் 4ஆம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்தப் பேச்சுகள் அனைத்தும் காலம் கடத்துவதற்காகத்தான் நடத்தப்படுகிறதே தவிர, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு சிறிதும் இல்லை. ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாடு இருப்பது தெளிவாகத் தெரியும்போது நான்கு கட்ட பேச்சுகள் நடத்த எந்தத் தேவையுமில்லை.
பழைய ஓய்வூதியம், ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பெரும் தடையாக இருக்கும் அரசாணை 243-ஐ நீக்குதல், உயர்கல்வி கற்பதற்கான ஊக்கத்தொகையை மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைக்கும் உரிமை, அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும், தகுதித் தேர்வை தேவையற்றதாக அறிவித்து, அதன் காரணமாக வழங்கப்படாமல் இருக்கும் தற்போதைய ஆசிரியர்களின் பதவி உயர்வை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளும் எந்த பேச்சுகளும் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டியவைதான். தமிழக அரசு நினைத்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர்களின் 15 கோரிக்கைகளையும் 15 நிமிடங்களில் நிறைவேற்றி விட முடியும். ஆனால், அதற்கான மனம்தான் தமிழக அரசுக்கு இல்லை.
வழிபடத் தகுந்தவர்கள் பட்டியலில் அன்னை, தந்தை ஆகியோருக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும். எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களை மீண்டும் ஒரு போராட்டத்தை நடத்தும் சூழலுக்கு தள்ளாமல், அவர்களின் 15 அம்சக் கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

