தமிழகம் முழுவதும் பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் சீர்காழியில் கைது - சிக்கியது எப்படி..?
தமிழகம் முழுவதும் ஏராளமான இருசக்க வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த இளைஞரை சீர்காழி காவல்துறையினர் கைது செய்து, விலை உயர்ந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, பாண்டிச்சேரி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞரை சீர்காழி காவல்துறை கைது செய்து, அந்த இளைஞனிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி உள்ளிட்ட பல பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போனதாக தொடர் புகார்கள் காவல்துறையினருக்கு வந்த வண்ணம் இருந்தது. இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா இருசக்கர வாகனங்களை களவாடும் திருடர்களை உடனடியாக பிடிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
அவரின் உத்தரவின் பேரில் சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மேற்பார்வையில், சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன், உதவி ஆய்வாளர் சிதம்பரம், அசோக்குமார், ராஜேஷ்குமார் மற்றும் காவல்துறை சீர்காழி புறவழிச்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மற்றும் சிறுவன் ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப் பின்னான தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை சீர்காழி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் சீர்காழி பிடாரி கீழ வீதி பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவரின் 22 வயதான மகன் கோகுலகிருஷ்ணன் என்பதும், இந்த இளைஞர் சீர்காழி, சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், போன்ற பகுதிகளில் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது.மேலும் அவருடன் வந்த இளம் சிறார் ஒருவர் திருட்டுக்கு துணை போனதும் தெரியவந்தது. இதனை அடுத்து திருடி மறைத்து வைத்திருந்த விலை உயர்ந்த 7 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த சீர்காழி காவல்துறையினர் கோகுல கிருஷ்ணன் மற்றும் சிறுவன் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் பகுதியில் மர்ம நபர்களால் தொடர்ந்து டூவீலர்கள் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் கொள்ளிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள தைக்கால் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கே.டி.எம். பைக்கை திருடுவதை கண்ட பொதுமக்கள் அவரை பிடித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் 24 வயதான மகன் ரஷீத் அலி என்பதும், அவர் தற்போது ஓசூர் பகுதியில் வசித்து வருவதும், கொள்ளிடம் பகுதியில் டூ வீலர்களை திருடி ஓசூர் பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரஷீத் அலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.