மயிலாடுதுறை: அதிகரிக்கும் டூவீலர் திருட்டுக்கள்.. சிசிடிவி காட்சிகளால் சிக்கிய இருவர் கைது..!
மயிலாடுதுறையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செம்பியநல்லூரை சேர்ந்தவர் முத்துராமன். 43 வயதான இவர் கடந்த 23-ஆம் தேதி மயிலாடுதுறை வள்ளலார்கோயில் மேலவீதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை உணவகத்தின் வெளியில் சாலையோரம் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு திரும்பிவந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துராமன், இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல் மயிலாடுதுறை செங்கமேட்டுத் தெருவை சேர்ந்த 50 வயதான மணி என்பவர் திருவிழந்தூர் பரிமள ரங்கநாதர் கோயில் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு கோவில் உள்ளே சென்று சுவாமியை வழிபாடு செய்துவிட்டு வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் கோவிலின் வெளியில் வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனம் காணாமல்போய் இருந்தது. இதனைத்தொடர்ந்து, வாகனம் காணாமல் போனது குறித்து மணியும், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோனது தொடர்பாக புகார்கள் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் பதிவானதால் மயிலாடுதுறை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். விசாரணை மேற்கொண்டதில் இருசக்கர வாகனங்கள் காணாமல் போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரம் சாலையை சேர்ந்த ரூபன் 21 வயது இளைஞர் மற்றும் திருவிழந்துரை சேர்ந்த 18 வயதான விமல்ராஜ் ஆகியோர் வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விமல்ரராஜ், ரூபன் ஆகிய இரண்டு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் இன்னல்களை கொடுத்து வருகிறது. இதனால் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். வேலை இழப்பு காரணமாக பல நாடுகள் பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோன்று பலரும் வேலை வாய்ப்புகளை இழந்ததால் தங்களது அன்றாட வாழ்க்கையை நடந்த வழி இன்றி பலரும் தவறான வழிகளில் பொருளீட்ட முயல்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் பலர் விபரீதம் அறியாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் திருட்டு, கஞ்சா, கள்ளச்சாராயம் என சட்டத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேலும் பல இளைஞர்கள் இதுபோன்ற தவறான பாதைகளுக்கு செல்வதை தவிர்க்க புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு நடைபெற உள்ள பட்ஜெட் தாக்கலில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தவேண்டும் என்றும், இல்லையெனில் தமிழ்நாடு முழுவதும் இதுபோல இளைஞர் கைதாவது தொடர்கதையாக மாறிவிடும் என சமுக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.