எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க ! புடவைக்குள் வைத்து புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தல்
புடவைக்குள் மது பாட்டில்கள் கடத்தி வருவதற்காக பிரத்தேகமான ஆடை தயாரித்து அதில் 230 மது பாட்டில்கள் கடத்தி வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கைது.

விழுப்புரம்: புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு புடவைக்குள் மது பாட்டில்கள் கடத்தி வருதற்கென்றே பிரத்யேகமான ஆடை தயாரித்து அதில் 230 மது பாட்டில்கள் கடத்தி வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த இரு பெண்களை திண்டிவனம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள செஞ்சி பேருந்து நிலையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் செல்வதுரை வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த இரண்டு பெண்களை அழைத்து விசாரணை செய்துள்ளனர். போலீசாரின் விசாரணையில் இரு பெண்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து அவர்களை திண்டிவனம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் மதுபாட்டில்கள் கடத்தி வர புடவைக்குள் பிரத்யேகமான உடைதயாரித்து அதில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து புதுச்சேரி மதுபாட்டில்கள் கடந்தி வந்த செஞ்சி பகுதியை சேர்ந்த சின்ன பாப்பா, யசோதா ஆகிய இரு பெண்களையும் கைது செய்து அவர்களிடமிருந்த 230 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர். புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் வழியாக செஞ்சி பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தி சென்று விற்பனைக்காக கொண்டு சென்றதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், புதுச்சேரியில் இருந்து இ.சி.ஆர்., வழியாக பைக்கில் மது பாட்டில்கள் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில், ஏட்டுகள் செல்வம், வெங்கடேசன், பாண்டியன் ஆகியோர், இ.சி.ஆர்., புத்துப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி பைக்கில் சென்ற இருவரை மடக்கி விசாரித்து பைக்கை சோதனை செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் வாங்கி சென்று மரக்காணத்தில் விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரியவந்தது. மதுபாட்டில் கடத்திய மரக்காணம் வேளாங்கண்ணி மகன் ஜெயசூர்யா 26; எழிலரசன் மகன் ஏழுமலை, 24; ஆகிய இருவரை கைது செய்து, 65 மது பாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு தனி அறை அமைத்து 90 எம்எல் பிராந்தி கடத்திய வரை விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்
விழுப்புரம் மது விலக்கு அமல் பிரிவு உதவி ஆய்வாளர் சதீஷ் மற்றும் காவலர்கள் தலைமையில் மதுரபாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் இருசக்கர வாகனத்தில் தனிஅரை அமைத்து புதுச்சேரி மாநில மது பானங்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து காவலர்கள் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்தவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், வண்டியை ஓட்டி வந்தவர் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெரு ராஜகோபால் என்பவரின் மகன் நாகராஜ் (45) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களாக புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு மது பாட்டில்கள் கடத்தும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே சிக்கிக் கொள்கின்றனர் பலர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

