Crime: சிக்கன் வேணுமா உனக்கு? பூரி கட்டையால் மகனை அடித்தே கொன்ற தாய், மகளுக்கு படுகாயம் ..
Crime: கோழி இறைச்சி சமைத்து தரக்கோரிய மகனை பெற்ற தாயே பூரிக்கட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம், மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: கோழி இறைச்சி சமைத்து தரக்கோரியதால் பெற்ற தாயே பூரிக்கட்டையால் அடித்ததில், படுகாயமடைந்த மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்:
அண்மையில் கரூரில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானதில், 10 குழந்தைகளும் இடம்பெற்று இருந்தது காண்போரை கண்கலங்க செய்தது. பெற்றோரின் ஆசைக்காக ஏன் இந்த சின்னஞ்சிறு குழந்தைகள் மரணிக்க வேண்டும் என தங்களது குமுறல்களை பொதுமக்கள் சமூக வலைதளங்கில் கொட்டி வந்தனர். குழந்தை இல்லாமல் தவிப்பவர்களுக்கு தான் அந்த வரத்தின் அருமை தெரியும் என வேதனையையும் வெளிப்படுத்தினர். இந்நிலையில் தான் வெறும் கோழி இறைச்சி கேட்டதற்காக பெற்ற மகனை, பூரிக்கட்டையால் தாயே அடித்துக் கொன்ற கோர சம்பவம் மகாராஷ்ட்ராவில் அரங்கேறியுள்ளது.
கோழி இறைச்சிக்காக கொலை
மகாராஷ்டிராவின் பல்கார் நகரில் உள்ள கஷிபடா பகுதியில், பல்லவி தும்கடா (40 வயது) என்பவர் தனது குழும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று அவரது 7 வயது மகன், மதிய உணவிற்கு தனக்கு கோழி இறைச்சி வேண்டும் என அடம்பிடித்துள்ளான். இதனால், ஆத்திரமடைந்த பல்லவி, தனது 7 வயது மகனை பூரிக்கட்டையால் கண்மூடித்தனமாக அடித்ததில் அந்த சிறுவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளான். மேலும் காயடங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண்ணின் மகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடந்தது என்ன?
சின்மே தும்டே எனும் சிறுவன தனது தாய் பல்லவி தும்டேவிடம், தனக்கு சாப்பிட கோழி இறைச்சி வேண்டும் என அடம்பிடித்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவர் மகனை சரமாரியாக தாக்கியுள்ளார். பல இடங்களில் காயம் ஏற்பட்டு அவன் மயங்கி விழவே, தனது 10 வயது மகளையும் அடிக்க தொடங்கியுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் விரைந்துள்ளனர். அங்கு விழுந்து கிடந்த சிறுவனை பரிசோதித்ததில் அவர் மரணம் அடைந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ஏன் அந்த குழந்தையை கொலை செய்தாய் என கேட்டுள்ளனர். ஆனால் அதனை மறுத்த பல்லவி, எனது மகனை நான் கொல்லவில்லை. மஞ்சள் காமாலை பாதிப்பால் இறந்துவிட்டதாக பதிலளித்துள்ளார். ஆனால், சிறுவனின் உடலில் இருந்த மோசமான காயங்களை கண்டு சந்தேகம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
போலீசார் விசாரணை..
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம், படுகாயமடைந்த சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பல்லவியை கைது செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கணவனை விட்டு பிரிந்து தனிமையில் வசித்து வரும் அவர் மனதளவில் பாதிப்புகளை கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. சிறுவன் கோழி இறைச்சி கேட்டதால் மட்டுமே ஆத்திரமடைந்து அந்த பெண் இந்த கொடூர தாக்குதலை நடத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




















