Crime: பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் திருமணம்.. மணநாளில் மணப்பெண்ணை கொலை செய்த உறவுக்கார இளைஞர்..
சூரத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூரத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னதான் காதல் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்பட்டு வருவது ஒருபுறம் இருந்தாலும், மறுபக்கம் அதுதொடர்பாக ஆணவக்கொலை, தாக்குதல் சம்பவங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளும் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்தியா முழுவதும் இத்தகைய குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் என்னதான் கடும் நடவடிக்கைகள் எடுத்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
அப்படியான ஒரு குற்றச் சம்பவம் தான் குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள லிம்பயத் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாணி. 20 வயதான இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜிதேந்திர சொனாவானி என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு கல்யாணியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மாதம் அங்குள்ள நீதிமன்றத்தில் கல்யாணி - ஜிதேந்திர சொனாவானியின் பதிவுத் திருமணம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இன்று மணமக்கள் இருவருக்கும் முறைப்படி ஜிதேந்திராவின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த நிலையில், நேற்று மாலை ஜிதேந்திரா வீட்டில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் எல்லாம் சென்று கொண்டிருந்தது. அப்போது கல்யாணியின் உறவினர் ஹிமந்த் சொனாவானி என்ற இளைஞர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கல்யாணியை சரமாரியாக குத்தினார். இதில் அலறித்துடித்த கல்யாணியின் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அது பலனின்றி கல்யாணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது கணவர் ஜிதேந்திரா அளித்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவுகள் 302 (கொலை) மற்றும் 324 (ஆபத்தான ஆயுதத்தைப் பயன்படுத்தி தானாக முன்வந்து காயப்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஹிமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருமணமான பெண் உறவுக்கார பையனாலேயே ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.