Crime : திண்டிவனம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் மீது போக்சோ வழக்கு
பள்ளியின் முதல்வராக உள்ள கார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம்: திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனை கிராமத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசர வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிபடுத்தவே அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் தலைமறைவாகியுள்ளதால் அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். பள்ளியின் முதல்வராக உள்ள கார்த்திகேயன் தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்சோ சட்டம்
இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஓரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10 தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:
18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல்,வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும். இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.
மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.