Crime: திண்டிவனத்தில் திமுக கவுன்சிலரின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
திண்டிவனம் அருகே திமுக கவுன்சிலரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 லட்சம் மதிப்புடைய பணம் ,விலை உயர்ந்த நகை ஆகியவை கொள்ளை.
விழுப்புரம் : திண்டிவனம் அருகே திமுக கவுன்சிலரின் வீட்டின் பூட்டை உடைத்து 25 லட்சம் மதிப்புடைய பணம் மற்றும் விலை உயர்ந்த நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென்பசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் . இவருக்கு திண்டிவனம் நத்தைமேடு பகுதியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில், இந்தப் பகுதியின் திமுக கவுன்சிலராக பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், தென்பசாரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காலை அவரது மனைவி வீட்டுக்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த 26 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த எல்.இ.டி. டிவி ,6 லட்சம் ரொக்க பணம், ஒரு லட்சம் மதிப்புடைய வைரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மயிலம் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தடயங்களை தேடி வருகின்றனர். மேலும் திண்டிவனம்,பிரம்மதேசம், மயிலம் காவல் நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன, போலீசாரின் மெத்தன போக்கால் தன இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்