Crime: ஓடும் பேருந்தில் குடும்பத்துடன் கைவரிசை காட்டும் திருட்டு கும்பல் - சிக்கியது எப்படி?
பேருந்தில் பயணித்து பயணிகளிடம் நூதன முறையை கையாண்டு குடும்பத்துடன் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்களை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் : மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பேருந்தில் பயணித்து பயணிகளிடம் நூதன முறையை கையாண்டு குடும்பத்துடன் தொடர் திருட்டில் ஈடுபட்ட மூன்று பெண்களை விழுப்புரம் நகர போலீசார் கைது செய்தனர்.
டிப்டாப் திருடிகள்
கண்டமங்கலத்தை சார்ந்த ஷீலா என்பவர் விழுப்புரத்திற்கு பேருந்தில் பயணித்து வந்துள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கையில் இருந்த ஹேண்ட்பேக்கை பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். அப்போது பேக்கிலிருந்த 2 ஆயிரம் ரூபாயை பேருந்தில் அமர்ந்திருந்த பெண் எடுத்ததை ஷீலா பார்த்துவிட்டு ஏன் பேக்கிலிருந்து பணத்தை எடுத்தீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு தான் பணம் எடுக்கவில்லை எனக்கூறி சமாளித்துள்ளார். இதனையடுத்து பணம் எடுத்த பெண்ணிடம் பாதிக்கப்பட்ட ஷீலா சண்டையிட்டு விழுப்புரம் காந்தி சிலையிலிருந்து ராதிகாவை இறக்கி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பணம், பொருட்களை குடும்பமாக திருடும் கூட்டம்
இதனையடுத்து ராதிகாவை போலீசார் நகர காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை செய்தபோது ஹேண்ட் பேக்கிலிருந்து பணத்தை திருடியதும், கூட்டமாக உள்ள பேருந்துகளில் ராதிகா தனது இருமகள்கள் மகேஸ்வரி, அனிதாவுடன் இணைந்து பேருந்தில் கூட்டமாக இருக்கும் போது அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பேக் கொடுங்கள் பத்திரமாக வைத்து கொள்கிறேன் என கூறி பேக்குகளை வாங்கி அதிலிருக்கும் பணம், பொருட்களை குடும்பமாக திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து திருவண்ணாமலையை சார்ந்த மூவரையும் நகர போலீசார் கைது செய்து மூவர் மீதும் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். மேலும் பேருந்து பயணிகளிடம் நூதன முறையை கையாண்டு திருடிய வழக்குகள் மூன்று பேர் மீதும் பண்ருட்டி, மரக்காணம், திண்டிவனம், திருவண்ணாமலை காவல் நிலையங்களில் உள்ளது.