விழுப்புரத்தில் அதிர்ச்சி ! காவலரை கொல்ல முயற்சி; வாகன தணிக்கையில் நடந்தது என்ன?
விழுப்புரம் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக, தலைமை காவலரை கொலை செய்ய முயன்ற நபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் நகரில் நடந்த பரபரப்பான சம்பவம் தொடர்பாக, தலைமை காவலரை கொலை செய்ய முயன்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸ் வாகன தணிக்கையில் பரபரப்பு
விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி சிலை அருகே, உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் நிறுத்தப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அவர் அஜித் குமார் என அடையாளம் காணப்பட்டார். குடிபோதையில் வாகனம் ஓட்டியிருந்த காரணத்தால், அவர்மீது மதுகுடித்து விட்டு வாகனம் ஒட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது மேலும் அவர் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
அச்சுறுத்தலாக மாறிய நிலை
இதையடுத்து அங்கிருந்து சென்ற அஜித் குமார், சிறிது நேரத்தில் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் இளஞ்செழியன் அருகே வந்து, திடீரென மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அவரை பணி செய்ய விடாமல், கொலைச்செய்யும் நோக்கத்தோடு பிளேடால் தாக்குதல் நடத்தி காயப்படுத்திய பின், அங்கிருந்து தப்பிச்சென்றார்.
தேடுதல் நடவடிக்கை
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைமை காவலரைத் தாக்கிய குற்றவாளியை பிடிக்க, விழுப்புரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் ரவிசங்கர் தலைமையில் சிறப்பு போலீஸ் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டது. பல மணி நேர தேடுதலுக்குப் பிறகு, இன்று காலை புதிய பேருந்து நிலையம் அருகே நின்றுக்கொண்டிருந்த அஜித் குமார் காவல் துறையினரின் கண்ணில் சிக்கினார்.
கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்
காவலர்கள் உடனடியாக அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர் மீது தாக்குதல், கொலைமுயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு நகரின் முக்கிய பகுதிகளில் ஒருபுறம் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றத்தில் சிக்கி, மறுபுறம் தலைமை காவலரையே தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.





















