வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து ரூ.60,000-க்கு பட்டாசு: மாயமான டிப்டாப் ஆசாமி!
விழுப்புரத்தில் வருமான வரித்துறை அதிகாரி போல நடித்து பட்டாசுகளை வாங்கி ரூ.60 ஆயிரம் தராமல் மாயமான டிப்டாப் ஆசாமி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் எடைமேடை அருகில் பட்டாசு கடை உள்ளது. இக்கடையை விக்கிரவாண்டியை சேர்ந்த வாசு என்பவர் நடத்தி வருகிறார். இங்கு நேற்று இரவு 10 மணிக்கு அரசு எம்பலம் பொறித்த கார் ஒன்று வந்தது. அதில் வருமான வரித் துறை என எழுதப்பட்டிருந்தது. அதில் இருந்து 30 வயது மதிக்கத்தக்க டிப் டாப் ஆசாமி இறங்கினார். பட்டாசு கடையை சுற்றிப் பார்த்த டிப் டாப் ஆசாமி, குழந்தைகளுக்கு தேவையான கலசம், கம்பி மத்தாப்பு, பேன்சி வெடிகள் போன்றவைகளை எடுத்துள்ளார். இதற்கு பில் போட சொன்னார். அவர் எடுத்து வைத்த பட்டாசுகளுக்கு 63 ஆயிரத்து 500 ரூபாய்க்கான பில் அவரிடம் வழங்கப்பட்டது.
அந்த பில்லினை செக் செய்த டிப் டாப் ஆசாமி, பட்டாசுகளை பார்சல் செய்து காரில் வையுங்கள், நான் ஜிபே செய்கிறேன் என கூறியுள்ளார். அவர் அங்கிருந்த கிஆர் கோடினை ஸ்கேன் செய்து பணம் போட முயற்சித்தார். அதற்கு சர்வர் பிசி என வந்துள்ளது. இதையடுத்து அங்கேயே அமர்ந்து 10 நிமிடம் கழித்து முயற்சித்தார். அப்போது பணம் அனுப்ப முயற்சித்த போது பெயில்டு ( Failed ) என வந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் முயற்சித்தும் பணத்தை அனுப்ப முடியவில்லை. உடனடியாக தனது பர்சை எடுத்த டிப்டாப் ஆசாமி, அதிலிருந்த பணத்தை எண்ணத் தொடங்கினார். அதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே இருந்தது. அங்கிருந்த பட்டாசு கடைக்காரரிடம், பர்சில் குறைவான பணம் மட்டுமே உள்ளது. காரில் பணம் இருக்கிறது. அதை எடுத்து வருகிறேன். அதற்குள் பட்டாசு பாக்சை காரில் வைக்குமாறு கூறினார்.
இதனை நம்பிய பட்டாசு கடை ஊழியர்கள் பார்சல்களை காரில் ஏற்றினர். காருக்குள் அமர்ந்த டிப்டாப் ஆசாமி, காரிலிருந்த பையை திறந்து பணத்தை எடுப்பது போல பாசாங்கு செய்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில், காரினை எடுத்துக் கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார். பட்டாசு கடை ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை எடுப்பதற்குள், டிப் டாப் ஆசாமி வந்த கார் சாலையில் இருந்து மறைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வாசு, விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர், அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், பட்டாசு கடைக்கு அருகில் இருந்த எடைமேடையில் இருந்த சிசிடிவி CCTV காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்