உளுந்தூர் பேட்டை அருகே வேனில் காணாமல் போன 264 சவரன் நகைகள்
நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது வரும் வழியில் பெட்டிகள் தவறி கீழே விழுந்ததா? குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் தங்கபெருமாள். இவர் அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது மகன் பெரியசாமி, இவருடைய மனைவி சித்ரா, மற்றொரு மகன் ஆனந்த ரமேஷ், இவருடைய மனைவி ஹேமலதா, தங்க பெருமாளின் தம்பி கோவிந்தசாமி, தங்கை ஆத்தியம்மாள் உள்பட 12 பேருடன் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு ஒரு வேனில் புறப்பட்டார். வேனை சென்னையை சேர்ந்த பாண்டி என்பவர் ஓட்டினார்.
தங்கபெருமாள் குடும்பத்தினர் தங்களது உடைமைகளை பெட்டிகளில் வைத்து அதை வேனின் மேற்கூரையில் வைத்து தார்ப்பாயால் கட்டி இருந்தனர். மேலும் அந்த பெட்டிகளுக்குள் நகைகளும் வைத்திருந்தனர். இவர்களது வேன் நேற்று அதிகாலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள பாதூரில் வந்தது. அப்போது டிரைவர் பாண்டி, டீ குடிப்பதற்காக தனியார் ஓட்டலில் நிறுத்தினார். அங்கு அனைவரும் இறங்கி டீ குடித்து விட்டு வேனில் ஏற முயன்றனர். அப்போது வேனின் மேற்கூரையில் கட்டப்பட்டிருந்த தார்ப்பாய் அவிழ்ந்திருந்தது.
இதனால் சந்தேகமடைந்த தங்க பெருமாள் குடும்பத்தினர் வேனின் மேற்பகுதியில் ஏறி பார்த்தனர். அங்கு வைத்திருந்த 4 பெட்டிகளை காணவில்லை. அதில் 2 பெட்டிகளில் 264 பவுன் நகைகள் இருந்தது. இதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுபற்றி திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்க கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பளர் செல்வக்குமார் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூா் ஏரியில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை, தாய் பிணமாக மீட்பு - ஹெச்.ஐ.வி காரணமா?
அவர்கள் தங்கபெருமாள் குடும்பத்தினர், டிரைவர் பாண்டி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதா? அல்லது வரும் வழியில் பெட்டிகள் தவறி கீழே விழுந்ததா? குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் வரும் வழியில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்