Fake IPL: போலி ஐபிஎல் மேட்ச் நடத்தி ரஷ்ய சூதாட்டாக்காரர்களை ஏமாற்றிய கும்பல்.. சிக்கியது எப்படித் தெரியுமா?
குஜராத் மாநிலத்தில் போலியாக ஐபிஎல் போட்டி நடத்தி அதற்கு சூதாட்டமும் நடத்தி பணம் சம்பாதித்த கும்பல் ஒன்று போலீஸிடம் சிக்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் போலியாக ஐபிஎல் போட்டி நடத்தி அதற்கு சூதாட்டமும் நடத்தி பணம் சம்பாதித்த கும்பல் ஒன்று போலீஸிடம் சிக்கியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. விளையாட்டில் சூதாட்டம் சட்டவிரோதமாக இருந்தாலும், இந்தியாவில் இது மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிழலுலக தொழில் 50 பில்லியன் டாலருக்கு அதிகமான மதிப்புடையது என நம்பப்படுகிறது. உலகக் கோப்பை தொடங்கி ஐபிஎல் பிரிமீயர் வரை நீண்டு கொண்டிருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் போலியாக ஐபிஎல் நடத்தி அதன் மூலம் ரஷ்யாவைச் சேர்ந்த சூதாட்டக்காரர்களை நம்ப வைத்து பணம் பறித்துள்ளது ஒரு கும்பல்.
குஜராத் கும்பல்:
இந்த போலி ஐபிஎல் மோசடி குஜராத் மாநிலத்தில் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் மொலிப்பூரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தான் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இதில் விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள் என பல்வேறு நபர்களும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஐபிஎல் அணிகளான சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என பல அணி வீரர்களின் பெயர்கள் இடம்பெற்ற ஜெர்சியை அணிந்து கொண்டு விளையாடியுள்ளனர்.
இதைவிட ஹைலைட் என்னவென்றால் ஐபிஎல் என்றொரு யூடியூப் பக்கத்தையும் ஆரம்பித்து. அதில் இந்த போலி ஐபிஎல் போட்டிகளை லைவ் ரிலேவும் செய்துள்ளனர். பின்னர் டெலிகிராம் ஆப் மூலம் பெட்டிங் நடத்தியுள்ளனர். இதில் ரஷ்யாவின் மாஸ்கோ உள்ளிட்ட மிகப்பெரிய நகரங்களில் உள்ள ரஷ்யர்கள் ஈடுபட்டனர். இந்த போலி ஐபிஎல்லில் விளையாடிய வீரர்களுக்குக் கிடைத்தது என்னவோ ஒரு நாளைக்கு ரூ.400 சம்பளம் தான்.
நம்பவைத்தது எப்படி?
என்னதான் கில்லாடி என்றாலும் கூட யாரை ஏமாற்ற வேண்டுமானாலும் தில்லாலங்கடி வேலை எல்லாம் செய்துதானே ஆகவேண்டும். அப்படித்தான் இந்த கும்பலும் நம்பகத்தன்மை வரவழைக்க பல நூதன மோசடி யுத்திகளையும் பயன்படுத்தியுள்ளது. அதன்படி, போட்டியைப் பார்ப்பவர்களுக்கு எவ்விதமான சந்தேகமும் எழுந்துவிடக் கூடாது என்பதற்காக ஹர்ஷா போக்லே குரலில் மிமிக்கிரி செய்து கமெண்டரி கொடுத்துள்ளனர்.
Some additional details, now on the @BBCNews site. pic.twitter.com/NdyYuWoLHt
— Jordan Elgott (@JElgott) July 11, 2022
அதுமட்டுமல்லாது ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்புவது போன்ற ஓசை இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்டு போட்டியின் பின்னணி ஒலியாக இணைக்கப்பட்டுள்ளது. உண்மையான ஐபிஎல் தொடர் முடிந்த மூன்று வாரங்களுக்கு பின்னர் இந்த ஐபிஎல் நடத்தப்பட்டுள்ளது. சவுண்ட் எஃபக்ட்ஸ், கமென்ட்டரி என பலவற்றையும் பார்த்தே ரஷ்ய கும்பல் ஏமாந்து போயுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 4 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவில் வேலை செய்து இந்தியா திரும்பிய நபர் ஒருவர் இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அவருக்கும் போலீஸார் வலை விரித்துள்ளனர்.
இந்த போலி ஐபிஎல் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.