நண்பனின் சகோதரியிடம் தகாத உறவு : தட்டிக்கேட்ட நண்பனின் முதுகில் கத்தியால் குத்திய நபரால் பரபரப்பு
வேலம்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் விநாயகத்தின் அக்காவோடு தகாத உறவில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காவனூர் மோட்டூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷன் என்பவரின் மகன் விநாயகம் (23). வேலம்பட்டு பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் ரஞ்சித் (25). வீடு வீடாக சென்று ஒன்றாக பால் கரக்கும் தொழிலை செய்து வரும் இவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். தொழிலிலும், நண்பிலும் நெருக்கமானவர்கள். இப்படி பட்ட நண்பர்கள் மத்தியில் தான் பெண் மோகத்தால் மோதல் ஏற்பட்டு சக நண்பனே, சக நண்பனை அடியாட்களை வைத்து கத்தியால் முதுகில் குத்தியுள்ளான்.
காவனூர் மோட்டூர் பகுதியை சேர்ந்த விநாயகத்துக்கு ஒரு அக்காள் உள்ளார். இவருக்கு திருமணமாகி கணவர் விபத்து ஒன்றில் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் விநாயகத்தின் நண்பனான வேலம்பட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித் விநாயகத்தின் அக்காவோடு தகாத உறவில் இருப்பதாக தெரியவருகிறது. இதனை அறிந்த விநாயகம் நாம் நம்பிக்கை வைத்துள்ள நண்பனே தனக்கும் தனது குடும்பத்துக்கும் துரோகம் இழைத்ததாக கருதி வேதனையடுத்து ஆத்திரம் அடைந்துள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக ரஞ்சித்தை தட்டிக்கேட்க வேலம்பட்டு சென்று அங்கிருந்த ரஞ்சித்தை எச்சரித்து வந்துள்ளார்.
ரஞ்சித், ஆத்திரம் அடைந்து தன்னோடு நான்கு கூட்டாளிகளை அழைத்து கொண்டு விநாயகத்தின் ஊரான காவனூர் மோட்டூர் சென்று அங்கு பிள்ளையார் கோவில் அருகே இருவரும் சந்தித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறியதில் ரஞ்சித்துடன் வந்த கூட்டாளிகளில் ஒருவர் விநாயகத்தின் பின் பக்கம் முதுகில் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து ரஞ்சித் உட்பட அனைவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோடியுள்ளனர். கத்திக்குத்துப்பட்டு சரிந்து ரத்த வெள்ளத்தில் துடித்த விநாயகத்தின் அலரல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் கே.வி.குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்து காவல் துறையினர் குத்துப்பட்டு கிடந்த விநாயகத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கத்தி பலமாக முதுகில் சொருகியிருந்ததால் இதை அப்புரப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக கூறிய குடியாத்தம் அரசு மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்க விநாயகத்தை கத்தியோடு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நீண்ட போராட்டத்துக்கு பிறகு கத்தியை அப்புறப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த கே.வி.குப்பம் காவல் துறையினர் அடியாட்களை வைத்து கத்தியில் குத்திய ரஞ்சித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் தேடி கே.வி.குப்பம் காவல் துறையினர் தேடி வருகின்றனர். நட்புடன் பழகிய நண்பனே சக நண்பனுக்கு துரோகம் இழைத்து முதுகில் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் சலசலப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.