Crime Iphone Delivery boy: ஐஃபோனுக்கு கொடுக்க காசில்ல.. டெலிவரி பாயை கொன்று எரித்த கொடூரம்..
கர்நாடகாவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஃபோனுக்கு கொடுக்க பணமில்லாததால் 20 வயது இளைஞர், டெலிவரி பாயை கொன்று நான்கு நாட்கள் கழித்து உடலை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில், ஆன்லைனில் ஐபோனை ஆர்டர் செய்த 20 வயது இளைஞன், டெலிவரி பாயை கொன்று, அவரது உடலை நான்கு நாட்கள் வீட்டில் வைத்து பின்பு எரித்துள்ளார். கொலை செய்த நபர் அரசிகெரே நகரைச் சேர்ந்த ஹேமந்த் தத்தா என்றும், பலியானவர் அதே ஊரைச் சேர்ந்த ஹேமந்த் நாயக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஐஃபோனுக்காக கொலை:
20 வயது இளைஞரான தத்தா கேஷ் ஆன் டெலிவரி முறைப்படி ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்திருந்தார். கடந்த 7 அன்று, நாயக் தொலைபேசியை வழங்க வந்தபோது, பெட்டியைத் திறந்து போனை கட்டுமாறு தத்தா கூறியுள்ளார். அதை செய்ய மறுத்து நாயக், பெட்டியை திறந்தால், அதைத் திரும்பப் பெற முடியாது. பணத்தை செலுத்திவிட்டு வாங்கிக் கொண்டு, பின்பு பெட்டியை திறந்து பருங்கள் என கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், தத்தா தனது வீட்டில் இருந்த கத்தியால் நாயக்கை குத்திக் கொன்றுள்ளார்.
உடலை 4 நாட்கள் வீட்டில் வைத்திருந்த இளைஞர்:
உயிரிழந்த நாயக்கின் உடலை தத்தா நான்கு நாட்கள் தனது வீட்டிலேயே வைத்திருந்துள்ளார். பின்பு கடந்த 11ம் தேதியன்று இரவு, நாயக்கின் உடலை ஒரு கம்பளியில் சுற்றி இருசக்கர வாகனத்தின் முன்புறத்தில் வைத்து அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்திடம் சென்றுள்ளார். அங்கு ஒரு மறைவான இடத்தில் நாயக்கின் உடல் மீது, மண்ணெண்னெயை ஊற்றி கொளுத்திவிட்டு நாயக் அங்கிருந்து தப்பியுள்ளார்.
சிக்கிய குற்றவாளி
இதனிடையே, ஹேமந்த் நாயக்கை காணவில்லை என அவரது சகோதரர் மஞ்சுநாத் நாயக் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதனடிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், ரயில்வே பாலம் அருகில் ஒரு உடல் இருப்பதாகவும், அது ஹேமந்த் நாயக் ஆக இருக்கலாம் என்றும், மஞ்நாத்தின் நண்பர் அவருக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றி கொலை வழக்கை பதிவு செய்த போலீசார், ஹேமந்த் நாயக்கின் செல்போன் எண்ணை டிராக் செய்ய தொடங்கியுள்ளனர். அதில், அவரது செல்போன் சிக்னல் கடைசியாக ஹேமந்த் தத்தாவின் வீட்டின் அருகே காட்டியுள்ளது. இதையடுத்து, அங்கு சென்று ஆய்வு செய்த போலீசார் தத்தாவின் வீட்டில் இருந்து, நாயக்கின் செல்போன் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதைதொடர்ந்து, மேற்கொண்ட விசாரணையில், தானும் டெலிவரி பாயாக வேலை செய்து இருக்கிறேன் எனவும், ஆசைபட்டு ஐபோனை ஆர்டர் செய்தாலும் கொடுக்க பணம் இல்லாததால், நாயக்கை கொன்று விட்டு, அவரிடமிருந்த ஐபோன் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொண்டதாகவும், தத்தா வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழில் அண்மையில் வெளியான பகாசுரன் திரைப்படத்தில் செல்போன் தான் உண்மையான பகாசுரன் என கூறி இருந்தனர். அதனை நிரூபிக்கும் விதமாக தான் ஒரு செல்போனுக்காக பெங்களூருவில் ஒரு கொடூர கொலை நடைபெற்றுள்ளது.