திருடிய பொருட்களை அதன் உரிமையாளரிடமே வாட்ஸ் ஆப் மூலம் விற்க முயற்சி- 2 பேர் கைது
வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் முகமது ரபீக் கடையில் சில தினங்கள் மட்டுமே வேலை செய்த முஜ்ஜமில் (24), கோபாலபுரம் செக்குமேடு பகுதியைச் சேர்ந்த அசீம் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது
குடியாத்தத்தில் திருடிய பொருட்களை, விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டு அதனை அந்த பொருட்களின் உரிமையாளரிடமே விற்க முயன்ற நூதன சம்பவம் அரங்கேறியுள்ளது . இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர் . மேலும் அந்த இரண்டு நபர்களிடமிருந்து அவர்கள் விற்க முயன்ற வெல்டிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களையும் பறிமுதல் செய்தனர் .
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தரணம்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரபீக். குடியாத்தம் பலமநேர் ரோடு, காத்தாடி குப்பம் பகுதியில் பீரோக்கள் தயார் செய்யும் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். இவர் வழக்கம் போல் கடந்த 20ஆம் தேதி இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார் .
மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த வெல்டிங் மெஷின், வெல்டிங் ராட் உள்ளிட்ட சுமார் ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டுப் போயிருந்தது. இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் முகமது ரபீக் அளித்த புகாரின் பேரில், கடந்த சனிக்கிழமை குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் முகமது ரபீக் காணாமல் போன உபகரணங்களுக்கு மாற்றாக ஏற்கனவே உபயோகப்படுத்திய வெல்டிங் மெஷின் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் நேற்று காலை அவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு அவரது நண்பர் ஒருவர் அவர் எதிர்பார்க்கும்படியான வெல்டிங் மெஷின் ஒன்று விற்பனைக்கு உள்ளதாகவும் , அதன் முழு விபரங்களையும் பெற குடியாத்தம் தரணம் பேட்டை காசிம் சாகிப் தெருவைச் சேர்ந்த வாலிபர் ஒருவரைத் தொடர்பு கொள்ளும்படி அவரது எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
சற்று சுதாரித்த ரபீக், அவரது நண்பர் மூலமாகவே விற்பனைக்குத் தயாராக இருக்கும் உபகரணங்களின் புகைப்படத்தை வாங்கி அனுப்பும்படி கூறியுள்ளார். அவர் கேட்டவாறே புகைப்படத்தை வாங்கி அனுப்பியுள்ளார் ரபீக்கின் நண்பர். மேலும் அந்த புகைப்படங்களை பார்த்த ரபீக் அந்த வெல்டிங் மெஷின் அவரது கடையில் திருட்டுப்போன வெல்டிங் மெஷின் தான் என்பதை உறுதி செய்தார். மேலும் இந்த பொருட்களை விற்பனைக்கு உள்ளதாக வாட்ஸ் அப்பில் பதிவிட்டு 2 வாலிபர்களின் குறித்த கூடுதல் தகவல்களைத் தனது நண்பர்கள் மூலம் திரட்டியுள்ளார்.
அவர்களைப் பற்றிய போதுமான தகவல்களைத் திரட்டியதும், உடனடியாக ரபீக் குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் வாட்ஸ் அப்பில் பதிவிட்டவர்கள் முகமது ரபீக் கடையில் சில தினங்கள் மட்டுமே வேலை செய்துவிட்டு நின்றுவிட்ட குடியாத்தம் தரணம் பேட்டை காசிம் சாகிப் தெருவைச் சேர்ந்த முஜ்ஜமில் (24), கோபாலபுரம் செக்குமேடு பகுதியைச் சேர்ந்த அசீம் (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து லட்சுமணாபுரம் பகுதியில் வைத்து முஜ்ஜமில் மற்றும் அசீமை போலீசார் கைது செய்தனர் மேலும் அவர்களிடம் இருந்து, வெல்டிங் மெஷின் உள்ளிட்ட 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.