கரூரில் கல்குவாரி கொலை வழக்கில் மேலும் 2 பேர் மீது குண்டாஸ்
கரூரில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி மீது, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் மேலும், இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது.
கரூரில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் மீது, வாகனம் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில், ஏற்கனவே கல்குவாரி உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை அருகே தனியார் ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் கல்குவாரி நிறுவனத்தை செல்வகுமார்(45) என்பவர் நடத்தி வந்தார். இந்நிலையில் கல்குவாரி செயல்படும் காலம் முடிந்தும், தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதாக கூறி அதே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெகநாதன் மற்றும் சமூக ஆர்வலர்கள் கனிமவளத்துறையினரிடம் புகார் கொடுத்ததின் பேரில், கடந்த செப்டம்பர் 5ம் தேதி கனிமவளத்துறை அந்த கல்குவாரியை நடத்த அனுமதி மறுத்தது.
இந்நிலையில், செப்டம்பர் 10ம் தேதி காருடையாம்பாளையம் அருகே விவசாயி ஜெகநாதன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த கல்குவாரியின் பொலிரோ வேன் ஜெகநாதன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். முன்னதாகவே, 2019 ஆம் ஆண்டு ஜெகநாதன் மற்றும் செல்வகுமார் இடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்பட்டது. அப்போது ஜெகநாதனை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், உயிரிழந்த ஜெகநாதன் என்பவர் மீது மோதிய வாகனம் கொலையா? அல்லது விபத்தா? என்பதை குறித்து க.பரமத்தி போலீசார் விபத்து குறித்து, விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் மற்றும் ஓட்டுநர் சக்திவேல் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டையில் இருந்து வரவழைக்கப்பட்ட கூலிப்படையை சேர்ந்த ரஞ்சித் என்பவரும், கொலைக்கு சம்பந்தப்பட்டுள்ளார் என விசாரணையில் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, கல் குவாரி உரிமையாளர் செல்வகுமார், டிரைவர் சக்திவேல், ரஞ்சித் ஆகிய மூன்று நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் கடந்த 10ம் தேதி குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய ஓட்டுநர் சக்திவேல் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, இன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
குட்கா கடத்திய டிரைவர் கைது.
கரூர் அருகே குட்கா கடத்திய ஜீப் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கரூர் நகர போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வேப்பம்பாளையத்தில் ஒரு ஜிப்பை வழி மறித்து சோதனையிட்டனர். இதில் அந்த ஜிப்பில் அரசால் தடை செய்யப்பட்ட ஆறு கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம், மோகனூரை சேர்ந்த லோகநாதன் வயது 34 என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய அதே ஊரை சேர்ந்த சரவணன் வயது 45 என்பவரை தேடி வருகின்றனர்.