Crime : மிதுன் சக்கரவர்த்தி நினைவிருக்கிறதா? அதிரவைத்த கோவை பள்ளி மாணவியின் தற்கொலை கடிதம் நினைவிருக்கிறதா? 2 முதியவர்கள் கைது..
ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அளித்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி தற்கொலைக்கு முன்பாக கடிதமும் எழுதி வைத்திருந்தார்.
கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக தாழிட்டு மின் விசிறியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி அளித்த பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு மாணவி தற்கொலைக்கு முன்பாக கடிதமும் எழுதி வைத்திருந்தார். இச்சம்பவம் குறித்து கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து கூறுகையில், ”மாணவி நன்றாக படிக்கக் கூடியவர். பள்ளியில் தொடர்ந்து நன்றாக படித்து வந்தார். சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி போன் எண்ணை வாங்கி சாட் செய்து வந்துள்ளார். ஆசிரியர் என்ற முறையில் மாணவியும் பேசி வந்துள்ளார். ஒரு முறை பள்ளிக்கு பெற்றோர் வர தாமதம் ஏற்பட்ட போது, தனது வண்டியில் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பள்ளி ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மாணவியின் மேலாடையை கழற்றி பாலியல் தொல்லை அளித்துள்ளார். தொடர்ந்து அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என மறைத்து விட்டனர். அப்பள்ளி தலைமையாசிரியர் பெற்றோரிடமும் சொல்ல வேண்டாம் என சொல்லியுள்ளார். பள்ளி நிர்வாகம் மாணவிக்கு தனியாக உளவியல் ஆலோசணையும் வழங்கியுள்ளது. கடந்த 6 மாதங்களாக மன உளைச்சல் உடன் மாணவி இருந்துள்ளார். கடந்த 6 மாதமாக அடிக்கடி வீட்டில் அழுவாள். காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாள்.
மாணவி அந்த பள்ளியை பிடிக்கவில்லை எனக்கூறி இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு தனியார் பள்ளிக்கு மாறினார். பள்ளி மாற்றத்திற்கான காரணம் குறித்து கேட்ட போது, முறையாக பதிலளிக்கவில்லை. மதுரைக்கு இடம் பெயர இருப்பதாக பள்ளியில் கூறி, மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளியில் சேர்த்தனர். நன்றாக படிக்கக் கூடிய மாணவி என்பதால், அப்பள்ளியில் சேர்த்துக் கொண்டனர். இருப்பினும் தொடர் மன உளைச்சலால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்” என உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அப்பள்ளி முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் தற்கொலை கடிதத்தில் ‘யாரையும் சும்மா விடக்கூடாது’ என 3 பேர்களை குறிப்பிட்டு இருந்தது குறித்து காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மாணவியின் வீட்டின் அருகே வசித்து வரும் பள்ளிவாசல் முத்தவல்லியாக இருந்த முகமது சுல்தான் மற்றும் அம்மாணவியுடன் படித்த ஒரு பெண்ணின் தந்தை மோகன்ராஜ் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதும், கடிதத்தில் அவர்களை குறிப்பிட்டு இருந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.