மயக்க மருந்து கூல்ட்ரிங்ஸ்... இளம்பெண்ணுக்கு 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை: கவுன்சிலர் மகன் கைது!
மீட்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. நடந்தது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது.
இளம்பெண்ணை ஆட்டோவில் கடத்தி மூன்று நாட்கள் வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக டி ஆர் எஸ் கவுன்சிலரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கொத்தாடா நகராட்சியின் 26 வது வார்டு கவுன்சிலர் முகமது பாத்திமா. தெலங்கானா ஆளும் கட்சியான 'தெலங்கானா ராஷ்டிர சமிதிக் கட்சியைச் சேந்த முகமதிபாத்திமாவின் மகன் கவுஸ். வேலைவெட்டி எதுவும் இல்லாமல் கஞ்சா அடித்து சுற்றிக்கொண்டிருப்பதே கவுஸின் முழு நேர வேலை எனக் கூறப்படுகிறது.
போதைக்கு அடிமையான கவுஸை கண்டிக்கவும், கண்டுகொள்ளவும் யாரும் இல்லை. இதற்கிடையே அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக தேடியபோது அந்த இளம்பெண்ணை கவுஸும் அவரது நண்பர்களும் ஆட்டோவில் அழைத்துச் சென்றதாக சிலர் தெரிவித்தனர்.
காணாமல் போய் 3 நாட்களாகியும் பெண் குறித்து எந்த தகவலும் வெளிவராத நிலையில் கவுஸ் தொடர்பான தகவலை நம்பி உறவினர்களும், போலீசாரும் கவுன்சிலர் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் அப்படி எதுவுமே தெரியாது என்றும், வீட்டில் யாரும் இல்லை என்றும் கவுஸ் தெரிவித்துள்ளார். யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது என முரண்டு பிடித்துள்ளார். கவுஸிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்ணின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து சல்லடை போட்டனர். அங்கே இருந்த ஒரு அறையில் காயங்களுடன் அப்பெண் மீட்கப்பட்டார்.
வாக்குமூலம்..
மீட்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. நடந்தது குறித்து விசாரணையும் நடத்தப்பட்டது. அதன்படி, கவுன்சிலர் மகன் கவுஸ், அவரது நண்பர் சாய்ராம் ரெட்டி ஆகிய இருவரும் என்னை ஆட்டோவில் ஏற்றினர். குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலவந்தமாக குடிக்க வைத்தனர். அதன் பின்னர் என்ன நடந்தது தெரியாது. சனிக்கிழமை மாலையே மயக்கம் தெளிந்து பார்த்தேன். அவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிந்தது. மீண்டும் மயக்க மருந்து குளிர்பானத்தை வாயில் ஊற்றி குடிக்க வைத்தனர். மீண்டும் ஞாயிற்றுக்கிழமைதான் கண் விழித்தேன்.அப்போதுநான் அவர்களிடத்தில் சண்டையிட்டேன். என்னை தாக்கினார்கள். மூன்றாவது முறையாகவும் குளிர்பான மயக்க மருந்தை கொடுத்து அத்துமீறினார்கள் என்றார். வாக்குமூலத்தின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்