சீரழியுது திருச்சி... வாலிபர்களிடம் இருந்த பொருளால் போலீஸ் அதிர்ச்சி
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் இருந்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்: திருச்சியில் இரண்டு வாலிபர்களிடம் போதை ஊசி சிக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட 2 வாலிபர்களிடம் இருந்து போதை மருந்துகள் மற்றும் போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம் போதைப் பொருட்கள் மற்றும் குட்கா பொருட்களை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில திருச்சியில் கடந்த சில நாட்களாக கஞ்சா, போதை மருந்துகள் போலீசாரின் அதிரடி சோதனையில் சிக்கி வருகிறது.
இந்நிலையில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் மேலபுலிவார்டு ரோடு நடுகுஜிலி தெரு பகுதியில் கோட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு சந்தேகப்படும் படி 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அந்த 2 வாலிபர்களையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனால் மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்பொழுது அவர்களிடம் போதை மாத்திரை மற்றும் போதை ஊசிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் திருச்சி தென்னூர் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த பிரவீன் கார்த்தி (24) சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் (24) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து போதை மாத்திரைகள், ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்கள் இரண்டு பேரும் போலீசாரின் ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பதும் தெரியவந்தது. இந்த இரண்டு ரவுடிகளும், போதை மாத்திரையை எங்கிருந்து யாரிடம் வாங்கினார்கள் என்பது குறித்தும், போதை மாத்திரைகளை யாரிடம் கொடுக்க இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி வாலிபர்கள் மத்தியில் தற்போது போதைக்கலாச்சாரம் விஷச்செடி போல் வேரூன்றி வருகிறது. இதை கண்டுபிடித்து போதை மருந்துகள், போதை ஊசிகளை தயாரிப்பவர்கள் முதல் அனைவரையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் திருச்சியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது இதேபோல் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து இலங்கைக்கு அனுப்ப இருந்த 330 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். மேலும் திருச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கை மக்கள் மத்தியில் பாராட்டை பெறும் அதே வேளையில் போதைப்பொருட்களை முழுமையாக அழிக்கும் வகையில் மாநில எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும். வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தி பின்னரே அனுப்ப வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் இந்த போதைமருந்து கலாச்சாரத்திற்கு அரசு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.