Crime: திருச்சி அருகே பயங்கரம்... காதல் திருமணம் செய்த ஜோடி வெட்டிக்கொலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே காதல் திருமணம் செய்த தம்பதியை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூர் ஆசாரித்தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). இவரும், அருகே உள்ள சோபனாபுரத்தை சேர்ந்த சாரதா (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. விவசாயியான ராஜ்குமார் நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராகவும் உள்ளார். தற்போது, அவர் வைக்கோல் சுற்றும் எந்திரமும் வாங்கி உள்ளார். அதுமட்டுமின்றி சோபனாபுரம் பகுதியை சேர்ந்த விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். தோட்டத்தில் வீடு ஒன்று உள்ளது. ராஜ்குமார் அந்த வீட்டில் தங்குவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜ்குமார் பி.மேட்டூர் பகுதியில் வைக்கோல் சுற்றும் பணிக்கு மனைவி சாரதாவுடன் சென்று இருந்தார். பின்னர் வேலை முடிந்ததும் இரவு தம்பதி இருவரும் தோட்டத்து வீட்டில் தங்கினர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் விஜயசேகரன் தோட்டத்து வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது, ராஜ்குமாரும், சாரதாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்ரத்னம், தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தையன், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், செபாஸ்டின் சந்தியாகு, பிரபாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து போலீஸ் துப்பறியும் மோப்பநாய் கொண்டுவரப்பட்டு சம்பவ இடத்தை அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்து கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் தோட்டத்து வீட்டின் வராண்டாவில் கயிற்றுக்கட்டிலில் தம்பதி இருவரும் படுத்து தூங்கி உள்ளனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியால் அவர்களது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொன்றார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா?, கொடுக்கல்-வாங்கல், முன்விரோதம், நிலப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் கொலை செய்யப்பட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தோட்டத்து வீட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி சந்தேகப்படும் வகையிலான நபர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்