Crime: கள்ளக்காதலியை கொன்று வங்கி ஊழியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - திருச்சியில் அதிர்ச்சி
திருச்சியில் கள்ளக்காதலியை குத்திக்கொன்று வங்கி ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் பொன்மலை அருகே உள்ள மேலகல்கண்டார்கோட்டை பழைய அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வினோத்குமார் (வயது 36). இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், இவரது முதல் மனைவிக்கும் விவாகரத்தானது. இதையடுத்து இரண்டாவதாக ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். ஆனால் தற்போது அவருடனும் விவாகரத்தாகும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேலகல்கண்டார்கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியில் உள்ள தனது தந்தை சுந்தரமூர்த்தியின் வீட்டிற்கு வினோத்குமார் அடிக்கடி வந்து சென்றார். அப்போது எதிர்வீட்டில் உள்ள சீனிவாசனின் மனைவி புவனேஸ்வரி (31) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அந்தநேரத்தில் புவனேஸ்வரியின் வீட்டிற்கு வினோத்குமார் வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து பழைய மஞ்சத்திடல் ரெயில்வே கேட் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி ரெயில்வே தொழிலாளர்களுக்கான ரெயில் வந்தது. வினோத்குமார் அந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சிதறிய நிலையில் தண்டவாள பகுதியில் கிடந்தது.
இதற்கிடையே கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொன்மலை காவல்துறை உதவி கமிஷனர் காமராஜ், இன்ஸ்பெக்டர் தனசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு மாநகர துணை கமிஷனர் ஸ்ரீதேவி நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் அங்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் பொன்னி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில், புவனேஸ்வரியை கொலை செய்த வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புவனேஸ்வரியின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் தண்டவாள பகுதியில் கிடந்த வினோத்குமாரின் உடலை ரெயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதலியை குத்திக்கொன்ற வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்