Crime: மூதாட்டியை கொன்று 5 பவுன் நகைகள் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்சி அருகே மூதாட்டியை கொன்று 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராதா (வயது 70). இவரது கணவர் வேலாயுதம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ராதா திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். ராதாவிற்கு ரஜினி (45) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருகிறார். ரஜினியின் மனைவி கர்ப்பமாக உள்ளார். இவர் பிரசவத்திற்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். இதனிடையே ரஜினியும் மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். வீட்டில் ராதா மட்டும் தனியாக இருந்தார். இதற்கிடையில் நேற்று ரஜினி தாயாருக்கு போன் செய்தார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ரஜினி பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்தி என்பவருக்கு போன் செய்து, தனது தாயார் போன் எடுக்காத விவரத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கார்த்தி வீட்டின் கதவை தட்டி உள்ளார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கார்த்தி போன் மூலம் ரஜினிக்கு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ரஜினி உடனடியாக ராஜபாளையத்தில் இருந்து புறப்பட்டு முத்தரசநல்லூர் கிராமத்திற்கு வந்தார். தான் வைத்திருந்த சாவியை வைத்து கதவை திறந்து உள்ள சென்று பார்த்தபோது, ராதா பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்து இருந்த 2 பவுன் சங்கிலி, 2 பவுன் வளையல், ஒரு பவுன் தோடு ஆகியவை திருடப்பட்டு இருந்தது. யாரோ மர்ம ஆசாமிகள் ராதாவை கொலை செய்து விட்டு நகையை கொள்ளையடித்து சென்று உள்ளனர். பின்னர் ராதாவிடம் இருந்த சாவியை எடுத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரஜினி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்