Crime: முசிறி சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் 2 பேர் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் முசிறி பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரெங்கநாதன். கூலித்தொழிலாளியான இவர் பல நாட்கள் வேலைக்கு செல்வதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து குடித்து, ஊர் சுற்றி வந்துள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் மாணவியுடன் ரெங்கநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரெங்கநாதன், மாணவியை பல நாட்கள் பள்ளிக்கு செல்லவிடாமல் தன்னுடன் ஊர் சுற்ற அழைத்து சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மாணவியை திருச்சி-முசிறி சாலையில் அய்யம்பாளையம் அருகில் உள்ள கோட்டூர் காவிரி படுகை பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். முன்னதாக அந்த இடத்திற்கு வந்துவிடுமாறு தனது நண்பர்கள் 5 பேருக்கும் ரெங்கநாதன் அழைப்பு விடுத்துள்ளார். காவிரி படுகையில் மறைவான பகுதிக்கு மாணவியை அழைத்து சென்ற ரெங்கநாதன் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அங்கு மறைந்திருந்த அவரது நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மாணவி அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அவரிடம் இதுதொடர்பாக பெற்றோரிடமோ, போலீசாரிடமோ கூறினால் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். அதற்கு பயந்து மாணவியும் வாய் திறக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த வாரமும் இதேபோல் மாணவியை ரெங்கநாதன் உள்பட அவரது நண்பர்கள் 5 பேரும் மாணவியை அழைத்து சென்று மிரட்டி ஒருவர்பின் ஒருவராக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்கிடையே ரெங்கநாதனுடன் மாணவி நெருக்கமாக இருந்த வீடியோவை அவரது நண்பர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டனர். கடைசியில் அந்த வீடியோ மாணவியின் தந்தை பார்வைக்கும் வந்துள்ளது. இடிந்து போன அவர் இதுபற்றி முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காவிரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், மணிகண்டன், தர்மா என்ற கணேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் தொடர்புடைய சிறுகாம்பூர் குடித்தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் தினேஷ் (23), ஐயப்பனின் மகன் கபாலி ராஜா என்கிற சரண் (20) ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்