Madurai : கள்ளக்காதலை கண்டித்ததால் தாய், தங்கையை வெட்டிக்கொலை : மதுரையில் பதைபதைக்கும் சம்பவம்!
மகேஸ்வரி அவரது கள்ளக்காதலன் சசிகுமாருடன் சேர்ந்து வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், தங்கையை கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மதுரை அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் தாய் மற்றும் தங்கையை கள்ளக்காதலுடன் சேர்ந்து பெண் ஒருவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பதினெட்டான்குடி கிராமத்தில் நீலாதேவி (47) மற்றும் அவரது இளைய மகள் அகிலாண்டேஸ்வரி (22) ஆகிய இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா தலைமையில் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் உள்ளிட்ட காவல்துறையினர் அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஏற்கனவே திருமணமான மகேஸ்வரி கீழவளவைச் சேர்ந்த சசிக்குமாருடன் தகாத உறவில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை இரு தினங்களுக்கு முன்பாக தாய் நீலாதேவி மற்றும் மகேஸ்வரியின் தங்கை அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரும் கண்டித்துள்ளனர்.
இதனால் கோபமடைந்த மகேஸ்வரி அவரது கள்ளக்காதலன் சசிகுமார் உடன் சேர்ந்து நள்ளிரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த நீலாதேவி மற்றும் அவரது மகள் அகிலாண்டேஸ்வரி ஆகிய இருவரையும் ஆட்களை வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மகேஸ்வரி மற்றும் சசிகுமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரையில் நடைபெற்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.