(Source: ECI/ABP News/ABP Majha)
திருவாரூர் நிலத் தகராறு விவகாரம்; தாக்குதலை வீடியோ எடுத்த கணவன், மனைவியும் கைது
இந்த தாக்குதல் காட்சி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய ஜெகன் மற்றும் அவரது மனைவி சரண்யா இருவரும் குடவாசல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள புதுக்குடியில் வசித்து வருபவர் நாராயணசாமி என்பவரின் மகன் ஜெகன். ஜெகனின் தந்தை 1997ல் ராஜேந்திரன் என்பவரிடமிருந்து 8000 ரூபாய்க்கு விவசாய நிலம் ஒன்றினை வாங்கியதாக கூறப்படுகிறது. கடந்த 2012 இல் நாராயணசாமி உயிரிழந்துள்ளார். அந்த நிலத்தை ராஜேந்திரன் விவசாயம் செய்து வந்துள்ளார். 2016 ல் இருந்து 2019 வரை ஜெகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2019ல் சொந்த ஊருக்கு திரும்பிய ஜெகன் அந்த நிலத்தை ராஜேந்திரனிடம் கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து சர்வேயர் மூலம் நிலத்தை அளந்து தனது பெயரில் பட்டாவை மாற்றியுள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரன் கந்த 2020இல் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2020ல் ஜெகன் அந்த நிலத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் ராஜேந்திரனின் மகள் கௌதமி என்பவர் அசாருதீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு ஐந்து வருடமாக வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2020ல் கௌதமி சொந்த ஊருக்கு வருகை தந்த நிலையில் அந்த நிலம் தனக்கு சொந்தம் என்று ஜெகனிடம் தகராறு ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து ஜெகன் நன்னிலம் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தொடர்ந்து உள்ளார். 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் ஜெகனுக்கு சொந்தம் என்றும் அதில் அவர் விவசாயப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம் அந்த நிலத்தில் அறுவடை பணிகளை கௌதமி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ஜெகன் நன்னிலம் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனையடுத்து கவுதமிக்கும் ஜெகனுக்கும் தொடர்ந்து இந்த நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி அந்த நிலத்தின் வரப்பை கௌதமி ஜேசிபி மூலம் உடைத்துள்ளார். இதனைப் பார்க்க ஜெகன் சென்றபோது கௌதமி அரிவாளுடன் வந்து ஜெகனை தாக்க முயன்று இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்த முயற்சித்து தகாத வார்த்தைகளால் ஜெகனை திட்டி உள்ளார். இதனை ஜெகன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் மனுவும் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அந்த பிரச்சனைக்குரிய நிலத்தில் கௌதமி டிராக்டர் மூலம் உழவு பணிகளை மேற்கொண்டு இருக்கிறார். இதனை அறிந்து தனது மனைவி சரண்யா மற்றும் குழந்தையுடன் சம்பவ இடத்திற்கு ஜெகன் சென்றுள்ளார். அவரிடம் கௌதமி மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை திட்டுகின்றனர். கௌதமி மண்வெட்டி எடுத்துக்கொண்டு தாக்க முயற்சிக்கிறார். இந்த வீடியோவும் ஜெகன் செல்போனில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முடிவில் காயமடைந்த ஜெகன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இரு தரப்பினரும் இது குறித்து குடவாசல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இந்த நிலையில் ஜெகன் தனது செல்போனில் எடுத்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த இரண்டு வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து இந்த செய்தி ஊடகங்களிலும் வெளியானது. அதனைத் தொடர்ந்து குடவாசல் காவல் துறையினர் அரிவாள் மற்றும் மண்வெட்டியுடன் ரகளையில் ஈடுபட்ட கௌதமி மற்றும் அவரது கணவர் அசாருதீன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதல் காட்சி வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய ஜெகன் மற்றும் அவரது மனைவி சரண்யா இருவரும் குடவாசல் காவல்துறையினரால் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.