(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலையில் தொடர் கொள்ளை.....பைக் ஆசாமியை சேஸ் செய்து பிடித்த போலீஸ்..விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
திருவண்ணாமலையில் தொடர் கொள்ளை மற்றும் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வைத்து பணம் பறிக்கும் பைக் ஆசையை சினிமா பட பாணியில் துரத்திச் சென்று பிடித்து கைது செய்த காவல்துறையினர்.
திருவண்ணாமலை அடுத்த சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார் வயது (32). இவர் கடந்த 16-ஆம் தேதி சொந்த வேலையாக திருவண்ணாமலைக்கு வந்து பணிகளை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்பொழுது தீபம் நகர் அருகே அடையாளம் தெரியாத வாலிபர் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்து ராம்குமாரின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து விட்டார். இதுகுறித்து ராம்குமார் உடனடியாக திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர் சாலை பச்சையம்மன் கோவில் அருகே சாலையோரம் பழம் வியாபாரி ஒருவரிடம் விலை இதே வாகனத்தில் வந்த ஆசாமி பழ வியாபாரிடம் பணத்தை மின்னல் வேகத்தில் கொள்ளை அடித்துச் சென்றார்.
இதுபோன்ற தொடர் வழிபறி மற்றும் கொள்ளை சம்பவங்கள் திருவண்ணாமலை நகரத்தில் நடந்ததையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பெயரில் நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் வழிபறி கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரிடம் மர்ம நபர் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். அப்போது காவல்துறையினர் வருவதை கண்டதும் தப்பி ஓடிய பைக் ஆசாமியை காவல்துறையினர் சினிமா பட பாணியில் விரட்டிச் சென்றனர். இதனால் அவர் தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரை காவல்துறையினர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அதனை தொடர்ந்து பைக் ஆசாமியிடம் நடத்திய விசாரணையில், இவர் திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாபட்டு கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் மகன் தங்கபாலு வயது (34) என்பதும் தெரியவந்தது. மேலும், தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை , செல்போன், பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடிப்பதையும் சில பெண்களிடம் ஆபாசமான முறையில் நடந்து கொண்டு அவர்களை தனது செல்போனில் படம் பிடித்து பணம் தேவைப்படும்போது அவர்களுக்கு போன் செய்து மிரட்டுவது ஆபாச படத்தை வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டி பணம் பறிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்தது. மேலும் இவர் வழிப்பறி கொள்ளையில் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்த நிலையில், தொடர்ந்து வழிபறிக் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது என காவல்துறையினர் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் தங்கவேலுவை காவல்துறையினர் கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை துரத்தி பிடித்த காவல்துறையினரை திருவண்ணாமலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.